STMK
  C.N.ANNADURAI
 

C.N.Annadurai - காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

கடமை
டாக்டர் அண்ணா பரிமளம்


20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்களை இனம் கண்டு தலைவராக ஏற்றுக் கொண்டவர் அண்ணா. அண்ணா அவர்கள் பள்ளி இறுதி ஆண்டு மாணாக்கராக இருந்த போது, 1925-ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள், தமிழரிடம் புகுத்தப்பட்ட ஏற்ற தாழ்வுளை ஒழிக்க சுளுரைத்து காங்கிர° எனும் பேரியக்கத்திலிருந்து வெளியேறியது, அண்ணாவின் இளம் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதே போல் 1929-ம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள், தான் யாரை பின்பற்ற வேண்டும், எந்தப் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்று அண்ணா அவர்கள் முடிவெடுத்திருக்கலாம்.

ஆதலால்தான் 1933, 1934 ஆகிய ஆண்டுகளில் முறையே காங்கேயம், திருப்பூர் ஆகிய ஊர்களில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியாரின் தலைமையில் பேசிய அண்ணா அவர்கள் தன் பட்ட படிப்பு முடிந்ததும் தந்தை பெரியாரின் படைவரிசையில் சேர்ந்து பணியாற்றுவது என்று முடிவெடுத்திருப்பார்கள் என்பது என் துணிபு.

தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மேம்பாட்டு கொள்கைகளை மக்களிடம் பறப்புவதிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும், மக்களை மறுமலர்ச்சி தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே தன் தலையாய கடமை என நினைத்து பணிபுரிந்தவர் அண்ணா. அது மட்டுமன்றி எல்லாத் தரப்பினரும் இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகிற முறையில் நயமாக, ஆனால் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அண்ணா. அதற்காக அரசியல்வாதியான அண்ணா அவர்கள் இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள். அவர் மேடைப் பேச்சுகளில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில், ஆற்றிய இலக்கியப் பணி கூட சமுதாய ஏழுச்சிக்கும் அவர் நடாத்திய விடுதலை இயக்திற்கும் தன் தம்பியர் படையை தயார் செய்ததற்கும் பயன்படுத்தியிருக்கிறார். அண்ணா அவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டதன் முக்கியக் குறிக்கோள், தமிழர் தன் இன, மொழி உணர்வுடன், ஏற்ற தாழ்வற்ற, சாதி, சமய மூடநம்பிக்கைகள் அற்ற, ஓர் சமுதாயத்தை மீண்டும் காண, ஊக்குவிக்க என்பதை தன் தலையாய கடமையாகக் கொண்டார்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்ப்பச் செயல்

என்ற குறளுக்கேற்ப அண்ணா தன் பணியை மேற்கொண்டார்

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகள் மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்துக்கள், பெண்ணுரிமை, அறியாமை ஒழிப்பு, சமதர்மம் இவைகள் எல்லாமே வீழ்ந்து கிடக்கிற தமிழினத்தை, தட்டி எழுப்ப, எழுப்பி நிறுத்த, இழந்ததைப் பெற, பெற்றபின் மீண்டும் தரணி மெச்ச வாழ என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப பாதை அமைத்து, பயணம் செய்து இளைஞர்களை ஈர்த்து, மாபெரும் அறிவியக்கமாக ஆக்கி வேதனைப்புரத்தில் உழன்ற தமிழர்களை வெற்றிபுரி அழைத்துச் சென்றவர் அண்ணா அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களின் தமிழகத்தைப் பற்றிய, தமிழனைப் பற்றிய கனவுகள் மெய்ப்படவேண்டுமென்றார், அரசாட்சியைப் பிடிக்க வேண்டும், அரசு நம் கைக்கு வரவேண்டும் என நினைத்தார் அண்ணா. அதற்காக பதினெட்டு ஆண்டுகள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார். பேராயக் கட்சியை எதிர்த்து, அதை ஆதரிக்கும் தன் தந்தை பெரியாரை எதிர் கொண்டு 1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி கண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை அரசு கட்டிலில் ஏற்றினார். தந்தை பெரியாரின் கனவுகளை நினைவாக்கினார்.

இதை அண்ணாவே சொல்கிறார்.

12.07.1968 அன்ற கரூரில் நடந்த தந்தை பெரியாரின் 89-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணா,

என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாட்களில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூட தவறு. இந்த நாடு அரசியலை நமக்கு நேர் மாறான கருத்துடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து அதனை கைப்பற்றியும் இருக்கிறேன். . .

. . . இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை, எதுவும் செய்ய இயலாது என்றால், ஓட்டிக் கொண்டிருப்பேன் என்று யாரும் கருத வேண்டாம். எனக்கு இப்பதவி இனிப்பானதல்ல . . .

இது அண்ணாவின் கூற்று.
அண்ணா அவர்கள் தன் சிறுகதைகள், புதினங்கள் மூலம் வரதட்சினைக் கொடுமை, பொருந்தா மணம், விலை மகளிர் அவலம், பல மணைவியரை மனத்தல், விதவைக் கொடுமை இவைகளைக் கண்டித்து எழுதினார். அவைகளில் இருந்து விடுபட, விதவை மறுமணம் கலப்பு மணம், இருதாரத் தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை இவைகளை வலியுறுத்தி எழுதி போர் தொடுத்தார்.

மார்க்சின் தத்துவத்தை அரசாங்கம் மூலமாக நடைமுறைப் படுத்துவதில் லெனின் எவ்வாறு தன்னை அர்பணித்துக் கொண்டாரோ அதேபோல தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை அரசாங்கம் மூலமாக செயல் வடிவம் கொடுக்க தன்னை அர்பணித்துக் கொண்டவர் அறிஞர் அண்ணாவாகும். காரல் மார்க்சுக்கு எப்படி ஒரு லெனின் அமைந்தாரோ அவ்வாறே தந்தை பெரியாருக்கு அண்ணா அமைந்தார்.

அண்ணா தமிழக முதல்வராக இருந்த குறுகிய காலத்தின் செயலாக்கம் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதிலேயே இருந்தது. அவற்றில் தலையாயது 'தமிழ் நாடு' எனப் பெயர் மாற்றம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அந்தந்தப் பகுதியைக் குறிக்கும் வகையில் பெயர்கள் அமைந்திருக்கும் போது நமது மாநிலத்திற்கு மட்டும் மாநில தலைநகரின் பெயரைக் கொண்டே '°டேட் ஆப் மதரா°' எனப் பெயர் அமைந்திருப்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தார். . .
(31.01.93- சசி - ஞாயிறு மலர், விடுதலை)

அதேபோல் பெரியாரின் மற்றொரு உயிர்க் கொள்கையான சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகவும் சட்டம் கொண்டு வந்தார்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்து இந்திக்கு இங்கே இடமில்லை என அறிவித்தார்.

ஆலயங்களின் வருவாயிலிருந்து பணத்தை கல்வி, மருத்துவம் முதலிய சமுதாய நல வசதிகளைச் செய்துத் தரக்கூடிய வகையில் அறநிலைய பாதுகாப்புச் சட்டத்தை சீர்திருத்தி அமைப்பதற்கான சாத்யக் கூறுகளை அறநிலைய ஆணையரைக் கொண்டு ஆராயச் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
(31.01.1993 - சசி - ஞாயிறு மலர், விடுதலை)

1944-ல் சேலத்தில் நடை பெற்ற ஜ°டி° கட்சி மாநாட்டில் 'அண்ணாதுரை' தீர்மானம் எனக் கொண்டு வந்து 'ஜ°டி°' கட்சியை 'திராவிடர் கழகம்' எனப் பெயரை மாற்றி அதன் தலைவர் தந்தை பெரியார் என்று பிரகடனப் படுத்தியவர் அண்ணா.

இதை தன் தலையாய கடமை என நினைத்து நிறைவேற்றினார்.

C.N.Annadurai - காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

கண்ணியம்
டாக்டர் அண்ணா பரிமளம்


தந்தை பெரியார் அவர்களது இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், இன வாதத்தையும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று பண்டித நேரு அவர்கள் தாக்கியிருந்த நேரம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அன்று சென்னையில் நேரு அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவது என்றும், மற்ற ஊர்களில் கண்டன ஊர்வலம் நடத்துவதென்றும் முடிவெடுத்து அண்ணா அறிவித்தார். சனவரி 14 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஏடுகள் பொங்கல் மலர் வெளியிடுவது வழக்கம். அண்ணாவுக்கு அய்யம். கவிஞர் கண்ணதாசன் உணர்ச்சி வயப்படுபவர் ஆயிற்றே என நினைத்து கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ஏடான தென்றல் அலுவலகத்திற்கு ஓர் தோழரை அனுப்பி சனவரி 6 பற்றி அவர்கள் ஏதாவது கவிதை எழுதியிருந்தால் அதைக் கொண்டு வாருங்கள் எனப் பணித்தார். அச்சில் எட்டுப் பக்கம் வந்திருந்த அந்தப்பாடல் அண்ணா அவர்களது பார்வைக்கு சென்றது.

நான் நினைத்தது போலவே கண்ணதாசன் உணர்ச்சி வயப்பட்டுவிட்டாரே என்னதான் நாம் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டிய போதிலும் அவரைப்பற்றி இழிவாகவா வர்ணிப்பது? இது நம் கழகத்தின கண்ணியத்திற்கே! இந்த வசைச் சொற்கள் நேருவின் மீது வீசப் பட்டன அல்ல! நம் மீது நாமே வீசிக்கொண்ட கணைகள். தென்றல் ஏடு இந்தப் பாட்டோடு வெளியாகக் கூடாது. வேறு பாடல் எழுதி வெளியிடுக. யார் மரியாதையும் குறையக் கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் அண்ணா.

கவிஞர் கண்ணதாசன் அந்தப் பாடலை நீக்கிவிட்டு, வேறு பாடல் எழுதி பொங்கல் மலரை வெளியிட்டார். (சங்கொலி இதழ் - மா.பாண்டியன்)

திரு. என். வி.நடராசன் அவர்கள் தொடக்கத்தில் காங்சிர°காரர். பிறகு திராவிடர் கழகத்திற்கு வந்தவர். திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சியில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

அவர் ஒரு முறை சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பேசும்போது சற்றே சினம் வயப்பட்டு காங்கிர° அமைச்சர்கள் செய்வதை சகிக்க முடியவில்லை மக்கள் அவர்களை நாயைப் போல் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு அறிவு வரும் என்று பேசிவிட்டார்.
அண்ணாவின் முகம் சிவந்துவிட்டது. உடனடியாக என்.வி.நடராசன் அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து உங்கள் பேச்சுக்கு இப்போதே மன்னிப்புக் கேளுங்கள் என்று சொல்ல அவரும் மன்னிப்புக் கேட்டார். ஆயிரம் வேறுபாடு இருந்தாலும் கண்ணியம் அண்ணாவுக்கு உயிரன்றோ?
(நம்நாடு - முத்துகிருட்டிணன்)

மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா, மதுரை வாரியார் திருப்புகழ் மண்டபத்தில் நடைபெற்றது. அண்ணா அவர்கள் கலந்து பொண்டு சிறப்புரையாற்றினார்.
எங்கோ இருக்கிற குன்றக்குடி மடாதிபதிக்கு இந்தப் பொன்விழாவில் சிறப்பிடம் தரப்படுகிறது. ஆனால் மதுரை ஆதினமான எனக்கு அந்த மரியாதை இல்லையே என்று குமைந்த இவன் மறுநாள் விழாவின் போது காலையில் ஓர் அரசியல் தலைவர் ஒருவருடன் மேடைக்கு வந்தார். அந்த அரசியல் தலைவரோ அண்ணாவை மிகமிகத் தரக்குறைவாக பேசினார். சாதியைக் குறிப்பிட்டு, மிகமிக மோசமாக திட்டினார்.

அவனைப் பேசவிட்டவர் கருங்காலிகள் என்று பேசிவிட்டார். கூட்டமே திகைத்து பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களெல்லாம் அந்தத் தலைவரை ஆதீனம் தூண்டி விடுவதைக் கண்டு மனம் சுளித்தனர். இது நடந்த இரண்டு நாள் கழித்து ஞாயிறு அன்று மாலை மதுரைச் சந்தைத் திடலில் அண்ணா அவர்கள் பேசும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டம் ஏற்பாடாயிருந்ததது.

அண்ணா அவர்கள் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்தவர்களெல்லாம் ஏமாறும் படி அண்ணா அவர்கள் அதைப்பற்றிப் பேசாமல் கண்ணியம் காத்தார். (மா.பாண்டியன்)

தந்தை பெரியார் திருமணம் செய்து கொண்ட நேரம் 1949-ம் ஆண்டு பெரும்பாலன கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக் கூடிய முடிவு பற்றி பலவகையான கருத்துக்ளைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான், தோழர் ஈ.வெ.சி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம்.ஏ.சித்தய்யன், இளவல் செழியன் போன்றவர்கள், நாம் பெரும்பான்மையோர் வலிவை பெற்றிருப்பதால் திராவிடர் கழகம், அதன் பெயரில் உள்ளச் சொத்துக்கள், விடுதலை நிறுவனம் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பல நாளாக வாதிட்டு வந்தோம்.

எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையே, திட்டங்களையே அறிஞர் அண்ணா அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை . திராவிடர் கழக சொத்துக்களையும், அமைப்பையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டு விட்டு புதிய கழகத்தை, புதிய கொடியுடன், புதிய அமைப்பை துவங்கலாம் என்றும், பெரியாரிடம் கற்றுக்கொண்ட கொள்கைகளையும், குறிக்கோளையும் காப்பாற்றி வளர்ப்பதுதான் நம்முடைய கடமையாக இருக்கவேண்டும் என்று அண்ணா அவர்கள் வாதிட்டு வந்தார்கள். (நாவலர். நெடுஞ்செழியன்)

தி.மு.க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஓர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் செயராமன் “எது வேண்டும் சொல் மனமே” என்று ஒரு பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைந்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்.

எது வேண்டும் என் தலைவா - தலைவா
மதிவேண்டும் என்ற உம் கொள்கையா - இல்லை
மணம் வேண்டி நின்ற உம் வேட்கையா
பணி செய்வோர் விசுவாசமா - இல்லை
மணியம்மை சகவாசமா?

இதைப் படித்துப்பார்த்த சம்பத் சட்டென்று அந்தத் தாளை உருவி அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது. சேச்சே, இது மாதிரி எழுதாதய்யா, அய்யா ரொம்ப வருத்தப்படுவார். அதிலேயும் நீ எழுதினதுன்னு தெரிந்ததோ, அப்புறம் அவருக்குத் தூக்கமே வராது. என்று சொல்லிவிட்டு அந்தத்தாளை கிழித்து எரிந்துவிட்டார். அண்ணா சும்மாதான் கிறுக்கினேன். மன்னிச்சுடுங்க என்றேன்.
(அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணாநந்தம்)

தி.மு.க. தேர்தல் கூட்டம் காஞ்சியில், அண்ணா அவர்கள் பேசும்போது காங்கிர°காரர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். தமிழ் நாட்டுக்குத் தேவையான திட்டங்கள் இன்னின்ன, என நான் ஒரு பட்டியல் தருகிறேன். அதை நீங்கள் மய்ய அரசிடம் சொல்லி வாங்கித்தந்துவிடுங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்காது என்று அறிவித்தார். இப்படி அறிவித்த முதல் தலைவர் அண்ணாதான், வரலாற்றில்.

திரு. டி.எம்.பார்த்தசாரதி அவர்கள் நடத்தி வந்த ‘மாலை மணி’ நாளிதழ் இரண்டாம் ஆண்டு மலர் (1952 ஆம் ஆண்டு) வெளியிடப்பட்டது. அதன் முகப்பில் ஓர் ஓவியம் தந்தை பெரியார் அவர்கள் கழகத்தவர்களை கண்ணீர்த்துளிகள் என்று அழைத்து கடுமையாக சாடிவந்த காலம். அந்தக் கண்ணீர்த்துளியே, பெருங்கடலாகப் பெருகி அந்தக் கண்ணீர் கடலில் பெரியார் தன் கைத்தடியுடன் மிதப்பது போல் படம் போடப்பட்டிருந்தது. அண்ணா இதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டடு பெரியார் நம்மை இழித்தும் பழித்தும் பேசினாலும், நாம் அவரை சிறிதும் குறைத்து பேசவோ, எழுதவோ கூடாது என்பது அண்ணாவின் அறிவுரை. பெரும் பணச் செலவில் பல்லாயிரம் படிகள் அச்சிடப்பட்டுவிட்டன. இநத் நிலையில் இந்தப் படம் வெளிவரக் கூடாது என்றால் என்ன செய்வது?

வண்ண மை ஈரம் காயாமல் இருந்ததால் பெரியார் உருவத்ததை இலகுவாக அழிக்க முடிந்தது. உடனே அலுவலகத்தில் உள்ள நாங்கள் அனைவரும் உட்கார்ந்து கையாலே அத்துனை அட்டைப்பட ஓவியங்களையும் அழித்தோம். பெரியார் மீது அண்ணா அவர்கள் கொண்டிருந்த மரியாதையும், தமது கண்ணியமான அரசியல் பண்பாட்டுக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்று அண்ணா மேற்கொண்ட நடவடிக்கைiயும் இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்.
(அண்ணா எனும் அண்ணல் - மா.செங்குட்டுவன்)

1962 - ம் ஆண்டிலே பூவிருநத்வல்லியிலே கழக நண்பர்களும் நானும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். மாங்காடு என்ற ஊரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. மக்கள் வெள்ளமோ கடலென திரண்டு வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டது அன்றைய ஊர்வலம் கோலாகலமாக அமைந்தது.
எதிர்பாராத விதமாக அன்றைய தமிழக விவசாய அமைச்சராக இருந்த திரு.எம்.பக்தவச்சலம் அவர்கள் கழக ஊர்வலத்தில் வந்து சிக்கிக்கொண்டார். மிக அலங்காரமாகவும், பார்ப்பவர்கள் மெய் மறந்து ரசிக்கக் கூடிய ஓர் அலங்காரத் தேரிலே அறிஞர் அண்ணா உட்கார்ந்திருந்தார்.

எப்படியோ திரு. பக்தவச்சலம் வந்து சிக்கிக் கொண்டு தவிப்பதை பார்த்துவிட்டார். அவ்வளவுதான். மிக வேகமாக கீழே இறங்கி ஓடிவந்து அவரை அங்கிருந்து வழியனுப்பவேண்டிய ஏற்பாடுகளைச் செய்து மிக கண்ணியத்துடன் அனுப்பிவைத்துவிட்டு பிறகு மீண்டும் தனது அலங்காரத் தேரில் ஏறி ஊர்வலமாக வந்தார். திரு.பக்தவச்சலம் வந்து உர்வலத்திலே மாட்டிக்கொண்டாரே என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்ற சூழ்நிலை அங்கே காணப்பட்டது. அந்தச் சூழ்நிலையை தகர்த்தெறிந்து அவரை மிக மரியாதையோடும், பெருமையோடும், எவ்வித சிறு குறைபாடும் நிகழாமல் அனுப்பிவைத்த சம்பவமானது அண்ணா அவர்களின் கண்ணியத்தை அரசியல் நாகரீகத்தையும் மனிதப்பண்பாட்டையுமே காட்டியது.
(டி.இராசரத்தினம்- முன்னால் சட்டமன்ற உறுப்பினர், பூவிருந்தவல்லி - அண்ணாவுடன் ஓர் அரிய சந்திப்பு மலர்)

திருச்சியில் இரண்டு நாட்கள் அண்ணாவின் கூட்டங்கள் நடத்துவது, முதல் நாள் தமிழிலும் இரண்டாவது நாள் ஆங்கிலத்திலும் என விளம்பரம் செய்திருந்தோம். நாங்கள் எங்கள் கூட்டங்களை விளம்பரப்படுத்தியப் பிறகு அண்ணா ஆங்கிலத்தில் பேச இருந்த நாளில் நாவலர் சோம சுந்தரபாரதியார் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து சிலர் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். முதல் நாள் கூட்டத்திற்கு வரும்போதே அண்ணா மறுநாள் நடக்க இருக்கும் இரு கூட்டங்களின் சுவரொட்டிகளை பார்த்து விட்டு நாளைய கூட்டம் இல்லை என அறிவித்துவிடு என்றார்.

அண்ணா நாங்கள் விளம்பரம் செய்த பிறகுதான், நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசுவார் என்று யாரோ வேண்டாத சிலர் விளம்பரம் செய்திருக்கிறார்கள். நாம் விளம்பரம் செய்தாகிவிட்டது உங்களது தமிழ் பேச்சைவிட எல்லோரும் ஆங்கிலப் பேச்சை எதிர்பார்க்கிறார்கள். அதை எப்படி நிறுத்த முடியும் என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நமக்குதான் கூட்டம் வரும் என்றேன் (நாவலர் சோமசுந்தர பாரதியார் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெரும் தமிழ் அறிஞர்), அதற்கு அண்ணா நானும் அதனால்தான் கூட்டத்தை நிறுத்தச்சொல்கிறேன்.

பாரதியார் கூட்டத்திற்கு யாரும் போகாமல் இருப்பது அவருக்கு ஏற்படுத்தும் அவமானமல்லவா? கட்சியைப் பரப்புவதைவிட பெரியவர்களை மதிப்பதுதான் முக்கியம். நீ சொல்லாவிட்டால், நானே நாளைக்கு கூட்டம் இல்லை என்று தெரிவித்துவிடுவேன் என்று கண்டிப்பாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அடுத்த நாள் கூட்டம் கிடையாது என்று நானே எதிரிலிருந்த மக்களிடம் அறிவித்தேன்.
தத்துவமேதை டி.கே.சீனிவாசன், (திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவர்- அண்ணா பவழ விழா மலர், 1984)

C.N.Annadurai - காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

கட்டுப்பாடு
 டாக்டர் அண்ணா பரிமளம்


சுமார் 50-வது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாருடன் அண்ணா வடநாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். லக்னோ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்கள் தமிழில் பேச அண்ணா அவர்கள் மொழிபெயர்த்தார்கள் ஆங்கிலத்தில்.

கூட்டம் முடிந்த பின்னர் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் அண்ணா அவர்கள் எம்.ஏ. படித்தவர் என்பதை அறிந்து சிறிது நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கேட்டார்.

அண்ணா தந்தை பெரியாரைக் கேட்க அவர் அனுமதி தர மறுத்துவிட்டார். அவர்கள் வற்புறுத்துவதைப் பார்த்த தந்தை பெரியார் அண்ணாவிடம் நான் அவரின் பேச்சை மொழிபெயர்க்க வந்திருக்கிறேன் என்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்லு என்றார். அண்ணா அவர்களும் தந்தை பெரியார் சொன்னதை அந்த மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, பேசுவதைத் தவிர்த்து தன் தலைவரின் சொற்படி கட்டுப்பாடோடு நடந்துகொண்டார்.

1953-ம் ஆண்டு மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டு அண்ணாவும் பல கழகத் தோழர்களும் சிறை ஏகினர். சிறை புகுந்த தோழர்கள் சிறை கூடத்தின் கட்டு திட்டங்களுக்கு உட்பட்டு கட்டுப்பாடு தவறாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி அதனை காத்து வருவதிலே அண்ணா அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஒரு சமயத்தில் சிறையில் ஒரு குழுவாக நுழைந்த முப்பது பேர் சாலையில் வரிசையாக அமரவும், அறைக்குள் இருக்கும் சிறு நீர்ப் பானையை வெளிக்கொண்டு வரவும் சோற்றினைச சென்று வாங்கிக்கொள்ளவும் மறுத்துவிட்டனர். சிறை வார்டன்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் தகராறு வளர்ந்தது. இதைக் கேள்வியுற்ற அண்ணா, என்னை அழைத்து அவர்களால் சிறு நீர் பானையை எடுத்து வெளியே வைக்க முடியவில்லையென்றால் நானே வந்கு அவர்களின் சிறுநீர்ப்பானைகளை வெளியே எடுத்து வைக்கிறேன் - சோறும் வாங்கித்தருகிறேன், அவர்களிடம் சொல் என்றார். நான் போய் கழகத் தோழர்களிடம் அண்ணா இப்படி உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றவுடன் அவர்கள் கண் கலங்கி அண்ணா வரவேண்டாம் நாங்களே முறைப்படி நடந்துக்கொள்கிறோம் எங்களை மன்னிக்கும்படி அண்ணாவிடம் கூறுங்கள் என்று தெரிவித்தனர்.
அண்ணாவோடு வாழ்ந்த அந்த சிறைவாசம், நாவலர் நெடுஞ்செழியன்.

கடற்கறையில் ஓர் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் நடக்கிறது. அண்ணா மேடையில் அமர்ந்திருக்கிறார். திராவிட முன்னற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, சம்பத், நாவலர், என்.வி.நடராசன், மதியழகன்)ஒருவரான திரு.என்.வி.நடராசன் அவர்கள உணர்ச்சி வசப்பட்டு இந்த மந்திரிகளை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசிவிட்டார். உடனே அண்ணா அவர்கள் அவர் பேச்சை நிறுத்தச் சொல்லி இப்படி பேசியதற்கு மக்களிடம் மன்னிப்பு கேள் என்றார். அவரும் மக்களைப் பார்த்து, நான் இப்படி பேசியது தவறு மன்னியுங்கள் என்றார்.

 

 

 இன்னொரு முறை அதே கடறகரையில் ஓர் கூட்டம். மக்கள் பெருந்திரளாக வந்திருக்கிறார்கள், அமர்ந்திருக்கிறார்கள். அண்ணா அவர்கள் எதிரே திரண்டிருந்த மக்களைப் பார்த்து தோழர்களே, மாற்றார் என்னைப் பார்த்து அவருக்குச் சேருகிற கூட்டம் கட்டுப்hடற்ற கூட்டம் என்று சொல்கிறார்கள். நீங்கள் கட்டுப்பாடுள்ள என் தம்பிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போது நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் நடக்க வேண்டும் என கூறி, எல்லோரும் எழுந்திருங்கள் என்றார். அந்த மனிதக் கடல் எழுந்து நின்றது. அமைதியாக அப்படியே கலைந்து செல்லுங்கள் என்றார். அந்த மக்கள் கூட்டம் தன் தலைவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமைதியாக கலைந்து சென்றது.


C.N.Annadurai - காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

தெளிவு
டாக்டர் அண்ணா பரிமளம்


ஒரு முறை மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில் அண்ணா பேசினார். கற்க கசடற என்கின்ற குறளைப்பற்றி சுமார் 1 1/2 மணி நேரம் பேசினார்.

கற்க என்கிறார், அதாவது கல்வியைக் கற்க வேண்டும்
சரி கல்வியைக் கற்கிறோம், எப்படி கற்க வேண்டும்?
கசடற கற்க என்கிறார். கசடு என்றால் என்ன? குற்றம்
பிழை, சரி, கசடு அறக் கற்கின்றோம்
எதனைக் கற்க வேண்டும்? கற்பவை கற்க வேண்டும்
கற்கத் தக்கவை எவை, கற்கத் தகாதவை எவை என்று
நூல்களை இரண்டாக பகுத்துக் கொண்டு கற்கத் தக்கவை
மட்டும் கற்க வேண்டும். அதிலும் கசடு அறக் கற்க வேண்டும்

இப்படி புதிய பொருள் கூறி பேசினார். கவிஞர் கருணாநந்தம் - அண்ணா சில நினைவுகள்

அண்ணா அவர்கள் கம்பராமாயணத்தை, மூலமான வால்மீகி இராமாயணத்தை இரண்டையும் ஆய்ந்து அறிந்தார். அந்நாளில் வாழ்ந்த பெரும் தமிழறிஞர் சொல்லின் செல்வர் ரா.பி.சேது பிள்ளை அவர்களுடனும், நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும் இராமாயணத்தைப் பற்றி சொற்போர் நடத்தினார். அவர்களால் அண்ணாவை வெற்றிகொள்ள முடியவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர் கம்பராமாயனத்தைக் கரைத்துக் குடித்தவர் திரு. செய்குதம்பி பாவலர். அண்ணாவின் கம்பராமயண விளக்கங்களைக் கேட்டு பாராட்டினார். அந்த விளக்கங்களை வைத்து நீதி தேவன் மயக்கம் எனும் ஓர் நாடகத்தை எழுதி அதில் தானே இராவணனாக நடித்து, பட்டி தொட்டிகளிலெல்லாம் கருத்து முழக்கம் செய்தார்.

இராவணனிடம் இரக்கமில்லையா, அல்லது இராவணனைக் கொன்ற ராமனிடம் இரக்கமில்லையா? என்பதை புராணங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டே விளக்கி எழுதப்பட்ட இலக்கிய நயமிக்க நாடகம் நீதி தேவன் மயக்கம். அண்ணா மேலும் சொல்லும்போது கம்பனின் கவித்திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்று கண்டு திகைக்கிறோம் என்கிறார்.

பிடி சாம்பல் என்றொரு புதினம். அது சரிதத்தை அடிப்படையாகக் கொண்டது. காஞ்சியை தலைநகராகக் கொண்டு சிறப்போடு ஆண்ட மகேந்திரப் பல்லவன் அவனைத் தொடர்ந்து அவள் மகன் நரசிம்மப் பல்லவன் இவர்களின் வரலாற்று நிகழ்சிகளை படம் பிடித்துக்காட்டி காஞ்சியின் வெற்றிக்கும், வீழ்ச்சிக்கும் காரணத்தை ஆராய்கிறார் அண்ணா. பெறிய புராணத்தில் இருந்து இரண்டு பாடல்களை எடுத்துக் காட்டி அதற்கு விளக்கம் தந்து ஒரு பெரிய உண்மையைப் புரிய வைக்கிறார். ஆம், காஞ்சீபுரத்தில் அன்று நடைபெற்ற சைவ, வைணவ போராட்டங்களால் ஏற்பட்டதே இந்தச் சீரழிவு என விளக்குகிறார்.

1966-ல் வட ஆற்காடு மாவட்டத்து வேலூரில் சட்ட வல்லுநர்கள் கூட்டம். அதில் சட்டம் பற்றி அண்ணா ஓர் அருமையான விளக்கம் தந்தார். இந்திய அரசியல் சட்ட மறு ஆய்வு பற்றி பேசினார்.

பல சட்ட முக்கிய பிரிவுகளை - குறிப்பாக மாநில, மய்ய அரசுகளின் உறவுகள் பற்றிய பிரிவுகளை, இரு அரசுகளுக்குமிடையே ஆன அதிகார பிரிவுகள் பற்றிய பிரிவுகளை, மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

இந்திய அரசியல் சட்டத்தை முழுமையாக ஒரு முறை படியுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொறு துறையில் பண்டிதராக இருப்பீர்கள். முனைப்போடு ஆய்வுக் குழுக்களை ஆங்காங்கே அமையுங்கள். விவாதம் செய்யுங்கள். திருத்தப்பட வேண்டிய பகுதிகளை தனியே பட்டியலிடுங்கள் இப்போதே நீங்கள் செய்யத் தொடங்கிடவேண்டிய அவசரப் பணி இது. இந்திய அரசியல் அரங்கில், வர இருக்கும் தேர்தலுக்குப் பின் எதிர்பாராத மாற்றங்கள் நிகழக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அனவே உடனே உங்கள் பணியைத் துவங்குங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

1967 - ல் அண்ணா முதல்வரானப் பிறகு 17.06.1967 தமிழக சட்ட மன்றத்தில் பேசுகிறபோது இப்படி குறிப்பிட்டார்.
“. . . சட்டம் தெரியாத - தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் அல்லா நாங்கள் தான் சட்டங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம். எனவே நிறைய தவறுகள் ஏற்படக் கூடும். அதனால் நீதிக்கு வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர் பெருமக்களாகிய உங்களை ஒன்று கேட்டுக் கொள்வேன். சட்ட முன் வரைவு (மசோதா) வடிவில் சட்ட மன்றத்தில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போதே சட்ட அறிஞர்களாகிய நீங்கள் ஆங்காங்கே ஊர்தோறும் கூடிப்பேசுங்கள். சட்ட முன்வரைவு பறிய உங்கள் கரத்துக்களை திரட்டுங்கள். திரண்ட கருத்தை மக்களுக்கும், அரசுக்கும் சொல்லுங்கள். அது உங்கள் கடமையுங்கூட, இந்த சட்ட வரைவுகள் சட்டங்களாகிர வரையில் அமைதியாக இருந்துவிட்டு, சட்டம் நிறைவேற்றப்பட்டபின், அதன் சந்து பொந்துகளிலே, இடுக்குகளிலே புகுந்து, அதில் உள்ள உரியசொற்களுக்கும், இடைச் சொற்களுகும் புதுப்புது விளக்கங்கள கொடுத்து ஆதாயம் தேடி, உங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முயலாதீர்கள். சமுதாயத்திற்கு கேடு விளைக்கும் தன்னலக் காரர்களுக்கு துணைபோக நினைக்காதீர்கள். உங்கள் தொழில் ஒரு புனிதமான தொழில். இந்திய விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில், காங்கிர°காரர்கள் நாங்கள் மட்டுமே இந்த விடுதலைக் காரணமானவர்கள் என்று தவறாக எண்ணிக் பொண்டிருந்த நேரத்தில், அந்த காங்சிரஸ கட்சியே இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆட்சி செய்கிறது என்ற மதர்ப்பில் மாநிலத்திலும் மய்ய அரசிலும் ஒரே கட்சி ஆள்கிறது என்பதால், எதிர்வரும் விளைவுகளைச் சிந்திக்காமல் செய்யப்பட்டது இந்திய அரசியல் சட்டம்".

தன்னலம் பற்றிய விளக்கம் இது. அண்ணா எவ்வளவு தெளிவாக இருந்தார் என்பதற்குச் சான்று

 

“ தன்னலமே தலை காட்டாது என்று கூறிவிடுவதே, என்னிடம் தன்னல உணர்ச்சி வெற்றி கொள்ளவே செய்யாது என்று இறுமாந்து கூறிடுவதோ, பொருளற்றதாகும். தன்னலம் என்பதற்றே வடிவங்கள், பலப்பல. தன்னலத்தை நிறை வெற்றிக் கொள்வதற்கான முறைகளும் பலப்பல.

தன்னலத்தை துளியும் கருதாதவன் என்றோ, தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ, ஒருவரைப்பற்றி கூறி, பெருமைப்படுத்துவதைக் காட்டிலும், உண்மையான பெருமை, தன்னலத்லை வென்றவன், தன்னல உணர்ச்சியால் தாக்கப்பட்டு தாழ்ந்துவிட மறுத்தவன், தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு வெற்றி கண்டவன், என்பதிலேதான் பெருமை இருக்கிறது.
தம்பிக்கு கடிதம்.

C.N.Annadurai - காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

துணிவு
டாக்டர் அண்ணா பரிமளம்


லார்டு ரெசஸ்கின் என்பவர் சென்னை மாநில ஆளுநராக இருந்த காலம். அவர் ஆளும் திறமற்றவர் என கணித்த அண்ணா ‘விடுதலை’ ஏட்டில் தலையங்கம் எழுதினார் . . .

நீதிக்கட்சி தலைவர்கள் ஆங்கிலேயர்களிடம் இணங்கி நடப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். அது ஆளுநர் பார்வைக்கு சென்று, அந்த தலையங்கத்துக்கு வருத்தம் தெரிவித்து அதே விடுதலையில் எழுத வேண்டும் என்ற ஆளுநரிடம் இருந்து ஒரு செய்தி ஜ°டி° கட்சி தலைவர்களில் ஒருவரான சர்.எ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வந்தது. அதை அவர் எடுத்துக்கொண்டு சென்று ‘விடுதலை’ யின் துணையாசிரியரான அண்ணாவிடம் காண்பித்து அதற்கு வருத்தம் தெரிவித்து எழுதச் கொன்னார். அண்ணாவோ துணிவோடு எழுத முடியாது என்று மறுத்துவிட்டார், அவர் பெரியாரிடம் சென்று சொன்னபோது ஐயாவோ, அண்ணா எழுதியது சரிதான் என்று எழுதிவிட்டார்.

பின்னர் பல நாட்களுக்குப் பிறகு அண்ணாவை சந்தித்த சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் “ நீங்கள் அந்த ஆளுநரைப் பற்றி எழுதியது சரியானதுதான், உங்கள் கணிப்புதான் சரி என்று பாராட்டினார்.

1939-ஆம் ஆண்டு அண்ணா ‘விடுதலை’ யில் துணை ஆசிரியராக இருந்த போது ஒரு தலையங்கம் எழுதினார். அதில் திரு. குமாரராசா (இன்றைய ராஜா சர்) அவர்களைத் தாக்கி இரண்டு வரிகள் இருந்தன. அந்த இரண்டு வரிகளை நீக்கி அச்சிட்டுவிடுமாறு செய்தி அனுப்பினார், பெரியார். அந்த இரண்டு வரிகளோடு தலையங்கம் வரவேண்டும். இல்லையேல நான் வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டார் அண்ணா.

தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் கருப்புச்சட்டை அணிய வேண்டுமென்றும் விரும்பினார். அண்ணாவுக்கு இதிலே உடன்பாடு இல்லை. அதற்காக அவர் குள்ள நரி என்று தூற்றப்பட்டார்.

ஆனால் 1948-ல் காந்தியார் சுடப்பட்டதின் விளைவாக கருப்புச் சட்டை படையை ஓமந்தூரார் ஆட்சி தடை செய்தது. அப்போது பகலிலும் இரவிலும் தொடர்ந்து கருப்புச் சட்டை அணிந்திருந்தார். இடுக்கன் வரும் போது தடுக்கி விழாமல் மிடுக்குடன் நின்றார் அடுக்கு மொழி வேந்தன் அண்ணா.
அண்ணா சில நினைவுகள், கவிஞர். கருணாநந்தம்.

இந்திய விடுதலை நாள் ஆக°டு பதினைந்து 1947. நமக்கு துக்கநாள் என்றார் தந்தை பெரியார். தனது தலைவர் இப்படிச் சொல்லிவிட்டாலே என அஞ்சாமல், தன் மனதில் பட்டதை துணிவோடு, ‘இல்லை’ விடுதலை நாள் மகிழ்ச்சிநாளே என அறிக்கை வெளியிட்டார் அண்ணா.

நானோ இந்த அறிக்கையின் விளைவாகவே கூட உங்களில் பலரால் கூட சந்தேகத்துக்கும், நிந்ததனைக்கும் ஆளாகச் கூடிய நிலையில் உள்ளவன். ஆனால் கூறுவது உள்ளத்தில் இருந்து வருபவை.

. . . இது கட்சிக் கட்டுப்பாட்டையும், தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்பட்டு என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வருவதானாலும் என் வாழ்நாளில் பிரிடிஷ் ஆட்சி கூடாது என்ற கொள்கையைக் கொண்டவன் நான் என்பதை மக்களுக்கு கூற எனக்கிருக்கும் ஒரே நாளான ஆக°ட் 15-ம் தேதியின் முக்கியத்துவத்துக்காக வேண்டி கட்சியின் கடுமையான நடவடிக்கைக்கும் சம்மதிக்க வேண்டியவனாகிறேன். தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னை கட்சியை விட்டு நீக்கினாலும், நான் கமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிட தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளை, கட்சிக்கு வெளியே இருந்தாலும் செய்துவருவேன் என்பதை கூறி இநத் அறிக்கையை முடிக்கிறேன். வணக்கம்.
திராவிடநாடு இதழ், ஆக°ட் 15 கட்டுரை - 10.08.1947

அண்ணா முதல்வரானதும் மூன்று அரும்பெரும் காரியங்கள் செய்தது யாவரும் அறிந்ததே.

அவை தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாக சட்டம் கொண்டுவந்தது, தமிழகத்தில் இருமொழி கொள்கை போதும், அது தமிழும் ஆங்கிலமும்தான் என சட்டம் இயற்றினார். மய்ய அரசு இந்தியை மூனறாவது மொழியாக வைத்திருந்தது. இந்தி வேண்டாம் என அண்ணா அறிவித்தார் துணிவுடன். இரு மொழி திட்டத்தைச் சட்டமாக்கிவிட்டு அண்ணா சொன்னார் துணிவுடன் “என்னாலானதை நான் செய்துவிட்டேன், தில்லி தன்னாலானதைச் செய்து கொள்ளட்டும்” என்று. இப்படி அன்றே மாநில சுய ஆட்சிக்கு வித்திட்டவர் அண்ணா!

C.N.Annadurai - காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை

கனிவு
டாக்டர் அண்ணா பரிமளம்


தஞ்சையில் ஓர் சிறப்புக் கூட்டம் அண்ணாவோடு என்னையும் பேச அழைத்திருந்தார்கள். தன்னோடு பயணம் செயும்படி அண்ணா அழைத்தார். இரயில் புறப்பட்டதும் இருவரும் சிறிது நேரம் பேசிக்பொண்டிருந்தோம். எனக்கு தூக்கம் வந்தது “உனக்கு தூக்கம் வந்தால் படுத்துத் தூங்கு” என்றார். நாம் மேலே படுப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏறி அமர்ந்து தலைக்கு என் பையை வைத்து அதன் மேல் அண்ணா கொண்டுவந்திருந்த அவருடைய போர்வையை வைத்து படுத்துத் தூங்கிவிட்டேன். இரவு 3 மணி இருக்கும். இயற்கையின் தொல்லையைத் தணித்துக்கொள்ள கீழே இறங்கினேன். அங்கே அண்ணா குளிர் தாங்க முடியாமல் தன் இரு கைகளாலும் உடம்பைப் போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். என்னை எழுப்பி அந்தப் போர்வையை கேட்டால் என் தூக்கம் கலைந்து விடுமே என்ற எண்ணம், அந்த கடுங்குளிரையும் அவரை தாங்கிக்கொள்ளச் செய்தது. அழுதுவிட்டேன். என் தலைவர் என்று அது வரை எண்ணியிருந்தேன். இல்லை என் தாய் என்று எனக்கு உணர்த்தினார்ந் அண்ணா பவள விழா மலர், தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்

இராசாசி கவர்னர் செனரலாக பொறுப்பேற்று தமிழகம் வந்த போது அவருக்கு திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது என்னை தலைவனாக கொண்ட அணியில் சென்னை டி.கே.கபாலி, காஞ்சி பரமசிவம் உட்பட 26 பேர், கருப்புக் கொடி காட்டி கைதானோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி முதன் முதலில் காங்கிர° ஆட்சியால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட முதல் அணியே அதுதான். முதன் முதலாக சிறைக்கு செல்லும் அணி என்பதால் அண்ணா அவர்களே ஓடோடி வந்து 26 பொட்டலம் பிரியாணி வாங்கி வந்து சிறை அதிகாரியிடம் பத்து நிமிடம் அனுமதி பெற்று, அவரே பிரியாணி பொட்டலங்களைப் பிரித்துக் கொடுத்து உண்ணச் செய்து, பிறகு தழுதழுத்தக் குரலில், மணி இவர்கள் யாரும் சிறைக்குச் சென்று முன் அனுபவம் இல்லாதவர்கள். நீதான் இவர்களுக்குத் தலைமை வகித்து ஆழைத்துப் போகவேண்டும். சிறைக்குள் எல்லா காரியங்களையும் செய்துத்தரவேண்டும் என்று கூறி சிறைக்கு வழியனுப்பி வைத்தார். - கே.டி.எஸ்.மணி, காஞ்சீபுரம் - அண்ணா அரிய செய்திகள் மலர்.


‘நீதி தேவன் மயக்கம்’, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ ஆகிய அவர் எழுதிய இரு நாடகங்களையும், தானே நடித்து அதன் முழு வருவாயையும் பள்ளிக் குழுவுக்கு அளித்ததை என்றும் நான் மறந்தறியேன். பள்ளியில் உள்ள கல்வெட்டு இன்றும் சான்று பகரும். - தமிழ்ப் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்.

இதே போல் அண்ணா அவர்கள் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அன்றைக்கு சேர்த்துத் தந்த தொகை (தன் குடும்பத்திற்கு என்று சேர்க்காமல்) பல இலட்சங்களைத்தாண்டும் - ஆம் அண்ணா அவர்கள் அறிவுச் செல்வத்தை மட்டுமல்ல - பொருட் செல்வத்தையும் வாரி வழங்கிய வள்ளல்.

எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு ‘தண்டலம்’ மாநாடு மூலமாக இலக்கணம் வகுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். (1957-ல் அண்ணா காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர். அவருடைய தொகுதியில் உள்ள ‘தண்டலம்’ எனும் கிராமத்தில் ஓர் மாநாடு கூட்டி, அன்றய முதல்வர் திரு.காமராசர் அவர்களை வரவழைத்து, மக்களைச் சந்தித்து உரையாட வைத்தார். இதற்கு முன் எவரும் இப்படிச் செய்யவில்லை.

அவருக்கிருந்த வேலை சுமைகளுக்கிடையே தனது தொகுதி கிராமங்களுக்குச் செல்லத் தவறுவதில்லை. இருபது முப்பது கிராமங்களைக் கொண்ட பகுதியின் மய்யக் கிராமம் ஒன்றில் இரண்டு மூன்று நாட்கள் முகாமிட்டுக்கூட மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்திருக்கின்றார். காஞ்சீபுரம் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்த புத்தேரி தொடூர் ஆகிய கிராமங்களின் பள்ளிக் கூடங்களை சற்றேரக்குறைய ஏழாயிரம் ரூபாய் செலவில் புதுப்பித்துத் தந்தார். அந்தப் பணம் அவர் சொந்தப் பணமாகும். - திரு. சி.எஸ்.பூஞ்சோலை, அண்ணாவின் நண்பர் - காஞ்சி

எதையும் தாங்கும் இதயம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
இந்தக் கவிதை வரிகளின்படி வாழ்ந்து காட்டியவர் அண்ணா.

எனக்கோ எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்ற கவிதை மனப்பாடம் தம்பிக்கு கடிதம் 24.07.1960

ஓர் தலைவனைப் பற்றிய இலக்கணம் கூறுகிறார் அண்ணா
சட்டியில் காய்கறி வேகுகிறது. அடுப்பின் வெப்பத்தை சட்டி தாங்கிக் கொண்டு வேண்டிய வெப்பத்தை மட்டும் கொடுத்து, காய்கறி வேகுகிறது. தலைவன் சட்டியைப் போன்றவன். எதையும் தாங்க வேண்டும்.
கைதி எண் 6342, 14.03.1964.

கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும் நான் என்னிச்சையாகவோ எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ மேற்கொள்வதில்லை என்றாலும் எனக்கென்று ஏதேனும் ஒரு விருப்பம் எழுகின்றது என்றால் அதை நிறைவேற்றிவைக்கும் விருப்பம் கழத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்து வருகிறேன். உணர்ந்து என்ன பயன்? காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பயன்? நிலமை இவ்விதம், அவ்வளவுதான்.
தம்பிக்கு கடிதம், 15.11.1964.

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவை
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 1

பகுதி: 1 2

 

 

 

அண்ணா அவர்கள் மேடைப் பேச்சாக இருந்தாலும், சட்டமன்ற உரையானாலும், நாடாளுமன்ற உரையானாலும் எங்கும் நகைச்சுவையுடன் பேசி எல்லோருடைய உள்ளங்களையும் கவர்ந்தார்.

சிலுவையும் சீடர்களும்!
ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.

இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா!
அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?
மற்றொரு முறை திரு.வினாயகம் எழுந்து நான் கொடுத்த ஆன் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே! என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா அவர்கள் சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்.

புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், விலைவாசி குறைந்துள்ளது என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து அது புளியமரத்தின் சாதனை என்கின்றார்

அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?

எதிர்கட்சியும் ஆளும் கட்சியும்
1957-க்கு முன்பு காமராசரும், காங்கிரசாரும் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்ட சபைக்கு வாருங்கள் என்றனர். அதன் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 1957-குப் பின்) இடம் பெற்ற போதும், 1962-ல் 50 பேராகச் சென்ற பிறகும் காங்சிரசார் - அதன் அமைச்சர்கள் சரியான எதிர்கட்சியில்லை, நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி கழகத்தை கேலியும், கிண்டலும் செய்தனர்.

அப்போது அண்ணா, நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரையில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதைப்போலவே ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

யாருக்காக இந்தக் குறள்?
நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா.

திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.

ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.

பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?

இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!

டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும்.
நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.

திரும்பும் சொல்லம்பு!
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் அவர்கள் அண்ணாவைப் பார்த்து,
யுவர் டேஸ் ஆர் நம்பர்ட் (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.

அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து,
மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட் (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

இப்படி தன்னை நோக்கி வீசப்படுகின்ற கணையை, வீசியவர்களை நோக்கியே உடனடியாகத் திருப்பி வீசுகின்ற சாமர்த்தியம் அண்ணாவிடம் மிகுந்திருந்தது. அண்ணாவை மடக்க எண்ணியோ வீழ்த்த வேண்டுமென்று விரும்பியோ சொல்லம்பை வீசுவோர் அந்த அம்பாலேயே துளைக்கப்பட்டு வீழ்ந்ததுதான் வரலாறு!

நாடாளுமன்றத்தில் அண்ணா!
ஒரு முறை மாநிலங்களவையில் அண்ணா ஆட்சிமொழிப் பிரச்சினை குறித்து அழகுபட பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலர் குறுக்கிடுகின்றனர். உடனே அண்ணா நகைச்சுவைத் ததும்பக் கூறினார்.

வெளிப்பார்வைக்குப் பலவீனமாகத் தோற்றமளித்த போதிலும், நமது தலைமை அமைச்சர் இரும்புக்கரம் படைத்தவர் என்பதும் எனக்குத் தெரியும்.

இரும்புக்கரம் கொண்டு மண்டைகளைப் பிளக்கலாம். ஆனால் இதயங்களை கவர முடியாது.

நமது தலைமையமைச்சருக்கு இரும்புக்கரமும், பொன் போன்ற இதயமும் இருக்கின்றன என நான் நம்புகிறேன்.

பேராசிரியர் இரத்தினசாமி(சதந்திரா - தமிழ்நாடு): கரம் தெரிகிறது - இதயம் வெளிப்படையாகத் தெரியவில்லை! அண்ணா: மனிதனுடைய பெருந்தன்மையில் எனக்கு இன்னமும் தன்னம்பிக்கை இருக்கிறது. அவருக்குப் பொன் இதயம் இருக்க வேண்டும் இரத்தினசாமி: இருக்கவேண்டும் . . . புபேஷ் குப்தா: இருக்கவேண்டும்

அண்ணா: அதுமட்டுமல்ல, மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுக்கு முற்பட்ட பொன்னாக அது இருக்க வேண்டும்; 14 காரட் தங்கமாக அது இருக்கக் கூடாது.

 

பேரறிஞர் அண்ணா இதயங்களை தன் வயப்படுத்தும் இணையில்லாத பேச்சாளராக விளங்கியதற்குக் காரணம் இப்போது புரிகிறதல்லவா?

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவை
( டாக்டர். அண்ணா பரிமளம் )

 

 

பகுதி: 2

பகுதி: 1 2

 

 

 

சட்டையில்லாத சங்கரன், வேட்டியில்லாத வேலன், புடவையில்லாத பொம்மி, சோப் கிடைக்காத சொக்கி, செருப்பு வாங்க முடியாத சிங்காரம் - நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் நல்ல தங்காள் என்ற பெண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பச்சை மட்டையை வைத்து நெருப்பு எரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பத்தினிதான், தனது நாட்டில் பன்னிரண்டு வருட வரையில் மழையில்லாததால் பட்டினியாகத் தனது குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் மாண்டதாகச் சொல்லப்படுகிறது. பச்சை மட்டையில் நெருப்பு எரித்த பத்தினி, இந்த நாட்டின் மழையில்லாமையையும் போக்கி இருக்கலாமே! அப்பொழுதெல்லாம் நாஸ்திகம் பரவவில்லையே. ஏன் அந்தப் பத்தினியார் மழையைப் பொழியும்படி செய்யவில்லை?

நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில்தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குத்தானே தோன்றியிருக்கின்றனர். மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக, இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான். ஒன்று இந்தக் கடவுள்கள் திறமையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலேயனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும்.

கண் இருந்தும் குழியில் விழ வேகமாகச் செல்பவனைக் கண்டால், கைகொட்டிச் சிரிக்கமாட்டோமா? கனியிருக்க காயைத் தேடித் திரிபனைக் கண்டு கேலி பேசாதிருப்போமோ? வெண்ணெயை ஒருவன் பறித்துக்கொண்டு இடத்திலே நின்று கெஞ்சுபவனைக் கண்டால் சிரிப்பு வராமலிருக்குமா?
விழுப்புரம் ஜங்ஷனிலிருந்துகொண்டு பாண்டிக்குப் போகிறவன் வழி பார்பபது போலவும், திருச்சி ஜங்ஷனிலுள்ளவன், மதராசுக்குப் போவதற்கு வழி பார்ப்பதுபோலவும், மக்கள் பிறந்தவுடனேயே அண்ணாந்து மேலே பார்த்துக்கொண்டு அப்பா! இதை விட்டு எப்போது அந்த லோகத்திற்கு வருவேன் என்று இந்த லோகத்தை ஒரு ஜங்ஷனாக்கிவிட்டார்கள்.

மாயம் எந்த அளவுக்கு மயக்கத்தை மக்களிடையே உண்டாக்கிற்று என்றால், நாற்பது வயது ஆளைப் பார்த்து, என்ன சௌக்கியமாயிருக்கிறீர்களா? என்றால், சௌக்கியமாயிருக்கிறேன் என்று சொல்லமாட்டான். ஏதோ இருக்கிறேன் என்று மேல் ஸ்தாபி இறங்கிக் கீழ் ஸ்தாயியிலே சொல்லுவான் சொல்லுவதிலே. சுரங்குறைந்திருக்குமென்பதோடு மட்டுமல்ல; பேச்சுடன் பெருமூச்சும் கலந்து வரும். அந்தக் கலப்பு கேட்டவனுக்கே பயத்தையும் கவலையையும் உண்டாக்கிவிடும்! நன்றாயிருக்கிறேன் என்று சொன்னால் என்ன? மேல் நாடுகளிலே ஆங்கிலத்திலே டூயூடூ என்றால் உடனே ஓ.கே. நன்றாயிருக்கிறேன் என்ற சொல்லுவார்கள் அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் ஏதோ இருக்கிறோம்.

தமிழர்களுக்கு ஒரு வீசை இருப்பு; ஓர் சிறிய உலைக்கூடம். கொஞ்சம் மூளை இவை இருந்தால் போதும் வாள் வடிக்க. வாள் வடித்துவிட்டார்களானால், அவர்களுக்கு முன்னமேயே இருக்கின்ற அஞ்சா நெஞ்சமும்,, அருமைக் கையும் போதும். பர்ணசாலைகள் அமைக்க வேண்டியதில்லை, ஐயனின் அருளைப் பெற; எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை சச்சரவுகளில்லாமலிருக்கிறார்கள் என்று நேரத்தை எதிர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை!

சந்திர மண்டலத்திலே ஏற்படும் ஒலியைக் கண்டறிந்து. இங்கு ஒலிக்கும்படி செய்யும் விஞ்ஞானக் கருவியில் வெற்றியால், சென்ற கிழமை அரைமணி நேரம் சந்திரமண்டலத்தின் ஒலி எதிரொலித்து ஆராய்ச்சி நடைபெற்றது.

தீபாவளிப் பண்டிகைகளுக்காகப் பட்டாசுக் கட்டுகள் வெடித்த ஒலி. இங்கு புராணங்களின் துணையால், சென்ற கிழமை, பழமை விரும்பிகளின் மனம் குளிருமளவுக்குக் கேட்டது. நரகாசுர வதை பற்றிய புராணம் படிக்கப்பட்டது.

பட்டினத்தடிகள் காலத்திலிருந்துதான் மாயா வாழ்வைப்பற்றி மக்கள் அதிகம் நினைக்க ஆரம்பித்தனர். காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது காண் என்ற மாயா வாழ்க்கைத் தத்துவம், இன்றும் உலவுகிறது. நாடகங்களிலே இதை நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கிருந்து அரசன் வருவான். அரசனைப் பார்த்து ஒருவன் கேட்பான்; இந்த அரண்மனை யாருக்குச் சொந்தம்? இந்த நந்தவனம் யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டியிலுள்ள இருபது லட்சம் யாருக்குச் சொந்தம் எனவும். அரசன், யாருக்கும் சொந்தமல்ல? என்று சொல்வான். உண்மையிலேயே அவன் இறந்த பிறகு அதை அவன் மகள் அனுபவிப்பான்; மகன் இல்லாவிட்டால், அவனது வாரிசுகளில் ஒருவன் அனுபவிப்பான். வாரிசுமில்லாவிட்டால், தர்ம கர்த்தாக்கள் அனுபவிப்பார்கள். இதை மக்கள் உணருவதில்லை. உணர அவர்கள் மனம் இடம் கொடுக்காது.

ஓர் தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக்கொண்டு வந்தவன் முன், ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள். நல்ல அழகி; பக்கத்திலே பளிங்கு நீரோடை; கட்டழகன் அந்த மங்கையை மணந்துகொள்ள இச்சைப்படுகிறான். மணந்துகொள்வதென்றால், இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது மேவையில்லாதிருந்த காலம் அது. காதலரிவரும் கண்களாற் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்தபோதிலும், அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள். அஞ்சாதே; அஞ்சுகமே என்றான். ஆனால் சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்டது. அது என்னவென்று கேட்கிறாள், அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல் என்கிறான். பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது! ஐயோ, யானையா! அச்சமாயிருக்கிறதென்றாள், அச்சமானால் அருகே வா! என்றான். வந்தாள்; அணைத்துக் கொண்டான்! திருமணம் முற்றிற்று!!
இந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த வீரனை வேலனாக்கி, கிழவனாக்கி, தேனும் தினைமாவும் கேட்டான் என்று சொல்லி வளையற்காரனாக்கிவிட்டார்கள்.


கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டுக் காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்தவர்களுக்குக் கூட, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு நாலு நாள் லீவு பெற்றாலும், குழந்தைக்கு மொட்டை அடிக்கத் திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்கு காவிரிக்கோ போய் வருவார்களேயொழிய, களிப்புக்காக, இயற்கை தீட்டிக் காட்டும் இனிய ஓவியங்களை காணச்செல்பவர் இரார்.

இருவருக்கும் சந்தேகம்
சார்! ஒரு சந்தேகம்.
என்னடா?
சரஸ்வதி எங்கே இருக்கிறாள்?
வெண்டாமரையில்.
அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்?
பிரம்மாவின் நாவில்.
பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?
மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்).
மஹாவிஷ்ணு எங்கே இருக்கிறார்?
ஆதிசேஷள் என்ற பாம்பின்மேல்.
அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?
அதுவா திருப்பாற்கடலில்.
திருப்பாற் கடல் எங்கே இருக்கிறது சார்?
(உபாத்தியார் பெரிய சந்தேகத்துடன்) உனது பூகோளப் படத்தை எடு. அதில் இருக்கிறதா என்று பார்ப்போம்.

எதை எழுதுவது? ஒன்று ஓர் நாள் நம் கவிஞருக்குச் (பாரதிதாசனுக்கு) சந்தேகம் பிறந்தது. தாமரை தன் அழகைக் காட்டி, எழுதச் சொல்லிற்றாம்; காடும் கழனியும் கார்முகிலும் கலாப மயிலும், மயிலனைய மாதரும், செவ்வானமும், அன்னமும், வீரமும், பிறவும், என்னைப்பற்றி எழுது என்று எழிலைப்பற்றித் தீட்டு என்று கூறினவாம்.


மறப்போம் மன்னிப்போம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

 

» மறப்போம் மன்னிப்போம் - இதற்கு பெரிய மனது வேண்டும். சொன்னது மட்டுமல்ல செய்தும் நடந்தும் காட்டியவர் அண்ணா. திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் படைத் தளபதி. அண்ணாவை ஒரு காலத்தில் மனமார பாராட்டியவர். பின்னாளில் மனம் மாறி அண்ணாவிடம் காழ்ப்புணர்ச்சி கொண்டார். அழகர் சாமி அவர்களின் உடல் நலம் கெட்டு எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டார். தன்னிடம் கோபம் கொண்டிருந்ததை மறந்து அவருக்கு உதவினார் அண்ணா. அவருடைய மருத்துவச் செலவுக்கு உதவ எண்ணிய அண்ணா தன்னை பொதுக்கூட்டத்திற்கு அழைத்த கழக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். தன்னை பொதுக் கூட்டத்திற்கு அழைத்தவர்களை, தனக்கு வழிச்செலவுக் அனுப்ப வேண்டிய பணத்தை அழகர்காமி அவர்களக்கு அனுப்பி வைத்து அந்த பண விடைத்தாளை தனக்கு அனுப்பினால் பொதுக் கூட்டத்திற்கு வருவேன் என அறிவித்து அதன் படியே செய்தார். தன் நாடகத்தின் மூலம் திரட்டிய ஒரு தொகையை நன்பர். கே.ஏ.மதியழகன் மூலம் மருத்துவமனையில் தங்கியருந்த ஆழகர் சாமி அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அழகர்சாமி அவர்கள் அப்பா மதியழகா இதுவரை யாரை நம்பியிருந்தேனோ அவர் கைவிட்டார், யாரை ஆவேசமாக எதிர்த்தேனோ, ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தேனோ அவர் எனக்கு உதவுகிறார். மதியழகா அண்ணாவுக்கு என் நன்றியைச் சொல்லப்பா என்றார்.
அண்ணா பவழ விழா மலர், 1984

» 1952-ம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் நேரு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி குறிப்பிடும் போது (சூடீசூளுநுசூளுநு) எனும் வார்த்தையைப் பயன்படுத்தினார்.

அதற்கு அண்ணா அவர்கள் தஞ்சாவூரில் 14.12.1952 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நேரு அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டு மிகப் பெரிய மனிதர்! மிகச் சாதாரணச் சொல்! மன்னிப்போம் - மறப்போம் என்றார்.

» இனியன கேட்பின் என்னரும் தம்பி
இனிது, இனிது இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்.
அடுத்ததன் நண்பராய் ஆகுதல் அன்றோ!

இனியன கேட்பின்
கனிமோழித் தம்பி
இனிது, இனிது
அன்பர்கள் அருங் குழாம்
அதனினும் மாற்றார்
திருந்தி நம்முடன்
சேர்ந்திட விழைதல்!

» 1946-ல் எதிர்ப்புகளுக்கு இடையில், பல முட்டுக்கட்டைகளுக்கு இடையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு அண்ணா நிதி திரட்டி ரு.25,000 அளித்தார். அன்னாளில் அவர் அண்ணாவை எவ்வளவோ தரக்குறைவாகத் திட்டியும் அண்ணா அவரைத் திருப்பித் தாக்கவில்லை.

» 1967-ல் முதல்வரான அண்ணா இப்படிச் சொன்னார்.
. . . உள்ளபடியே இந்த அமைச்சர் பதவியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய அதிக அதிகாரம் இல்லையே என்பதுதான் எங்கள் வருத்தம்.

» இந்தக் கணக்கைப் பார்க்காமல் வேறு கணக்கைப் பார்ப்பது முடியாத காரியமா? நாம் எதிர்கட்சி என்பதற்காக முன்பு நமது குப்புசாமியை அவர்கள் மூன்று நாள் சிறையில் வைத்தார்களா? சரி அங்கே யார் இருக்கிறார்கள், குமாரசாமியா? அவரைப் பிடித்து 6 நாள் வை!

நமது சின்னசாமி மீது வழக்கு போட்டார்களா? பெரியசாமி அங்கிருந்தால் வழக்கு போடு என்று கூறமுடியாதா? சுலபமான காரியம். அற்பன் தவிர வேறு யாரும் அதை அரசியல் என்று கூறமாட்டான். நான் பதவியேற்றதும் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். நாங்கள் தேர்தல் நேரத்தில் நியாயமாகத்தான் நடக்க முயன்றோம் என்று கூறினார்கள். நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல் செயலாற்றுங்கள் என்று! ,இன்னும் சிலர் கூறினார்கள் அப்போதய முதலமைச்சர் ரொம்ப தொந்தரவு செய்தார்; அதனால்தான் என்று ஏதோ கூற ஆரம்பித்தார்கள். அந்த விஷயத்தையே கூறவேண்டாம் நீங்கள் நிரங்தரமான சர்க்கார் ஊழியர்கள் நாங்கள் மக்கள் அனுமதிக்கிறவரை அமைச்சர்கள் இரண்டு பேருக்குமுள்ள தெடர்பைத் தெரிந்திருக்கிறேன். ஒரு துளியும் கவலைப் படாமல் நல்லா பணியாற்றுங்கள் என்று கூறினேன்.

» அய்யாப்பிள்ளை என்று ஒருவர் பின்னாளில் சிறந்த திரைப்பட உரையாடலாசிரியரானவர். தொடக்க காலத்தில் மேடைகளில் அண்ணாவை கடுமையகத் தாக்கிக் கொண்டிருந்தார். பிறகு திரைப்பட உரையாடலாசிரியராக வேண்டும் என நினைத்து அண்ணாவின் உதவியை நாடினார். அண்ணாவை சந்திக்க அவருக்குத் தயக்கம். கலைஞர் கருணாநிதி அவர்கள் உதவியுடன் அண்ணாவைச் சந்தித்தார். அவரைப் பார்த்த அண்ணா எல்லாவற்றையும் மறந்து என்ன அய்யா பிள்ளை, நலமா? என்ன வேண்டும் என்றான். அப்போது புகழ்பெற்றிருந்த திரைப்பட இயக்குநர் திரு.ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களுக்கு ஓர் பரிந்துரை வேண்டும். அவரிடம் நான் உதவியாளனாக பணியாற்ற வேண்டும் என்றார்.

அண்ணா உடனே தொலைபேசியில் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களுடன் தொடர்பு கொண்டு இவரை பரிந்துரைத்து, அவரை சேர்த்துக் கொள்ளச்செய்தார்.

 

» காமராசரை எதிர்பதே முதலில் அண்ணாவுக்குப் பிடிக்கவில்லை. கலைஞரின் பிடிவாதம் வென்றது. என்னண்ணா நீங்க, படுத்துகிட்டே ஜெயிப்பேன்னாரு. அவ்வளவு அலட்சியம் நம்மை பத்தி! கட்டை விரலை எட்டுவேன்னு சொன்னாரு முந்தி! அவர் தோத்ததுக்கு வருத்தப்படுறீங்களே! ஜெயிச்சது நம்ம ஆளுங்கங்கறதே உங்களுக்கு மறந்துடுச்சா? என்று துணிவுடன் கேட்டேன். அரசியலில் அவர் எதிரிங்கறதை நான் மறுக்கலேய்யா. ஆனா தமிழ்நாட்டுக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காருங்கறதை மக்கள் மறந்துட்டாங்களே. அவர் மட்டும் தோத்திருக்கக்கூடாது என்றார் பெருந்தன்மையின் கருத்துள்ளவர். அத்துடன் நின்றாரா? நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் வருந்தினார். அய்யோ தமிழர் ஒருவர் மத்ய அமைச்சரவையில் இடம் பெறுவது போயிற்றே என்று இறங்கினார்.
அண்ணா சில நினைவுகள் - எஸ்.கருணாநந்தம்.

» கடலூர் இரா.இளம்வழுதி-வழக்கறிஞர். அவர் சாக்கடைத் தண்ணீரில் பேனாவை தோய்த்து எழுதியதுபோல் எப்படியயெல்லாம் கடிதங்கள் வரைந்ததார். கழகத் தலைவர்களுக்கு அவரை அமைச்சரவையில் சேர்க்கவில்லையாம் அதற்காக இழிமொழிகள், வசவுகள், சாபங்கள், தாபங்கள்! இவரைவிட நீண்ட நாட்களாக கட்சியிலிருந்து வந்த இன்னும் இருவர் மேலும் அனாகரீகமாக நடந்துகொண்டனர். அவர்களிருவருக்குமே நேரில் வந்து அண்ணாவை கேட்க அச்சம். தம் தம் துணைவியர், மக்கள் இவர்களை அனுப்பினர். பட்டிக்காட்டுப் பெண்கள்போல் அவர்கள் அழுது, சாற்றி புலம்பி, மாறடித்து மண்ணை வாரி இறைத்து அண்ணாவின் வீட்டில் அட்டகாசம் செய்தனர். எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அண்ணாவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். உங்களாளே எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியுது அண்ணா? என்றேன்.

ஷேக்ஸ்பியர் நாடகம் ஜூலியஸ் சீசர் படிச்சோமே, வெறும் பாடமாவா படிச்சோம்? படிப்பினைன்னு நினைச்சுதானே படிச்சோம். நீயுமா புரூட்டஸ்ன்னு சீசர் கேட்டாள், நானும் கேட்க வேண்டியது தானா? நீயுமா, நடராசன், நீயுமா சின்னராஜ், ஆனா நான் கேட்கலே. கேட்கமாட்டேன். என்னா நான் சீசரில்லை வெரும் அண்ணாதுரை!

» 1949-ல் தந்தை பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் அமைத்தார். 1967-ல் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. 18 ஆண்டுகள் பிரிவு தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில். அண்ணா முதல்வரானதும் திருச்சிராப்பள்ளி சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அண்ணா அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அண்ணா என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். முதல்வரானதும் நான் அவரைப் பார்க்காவிட்டால் அது மனிதப் பண்பே ஆகாது என்றார்.
அண்ணா சில நினைவுகள், கவிஞர். கருணாநந்தம்.

» பேரரிஞர் அண்ணா அவர்கள் 1957-ம் ஆண்டு தருமபுரி நகரப் பொதுக்கூட்டத்திற்கு உரையாற்றிட வருகை தர நகர தி.மு.க. சார்பாக ஏற்பாடு செய்திருந்தோம்.

தருமபுரியைச் சேர்ந்த ஒரு திராவிட கழகத் தோழர், அண்ணாவைத் தாக்கி தமிழ்த்தாயைக் கொன்றவனே, வேசி மகனே, இந்தப் புனிதமான மண்ணுக்குள் காலெடுத்து வைக்காதே என்று அச்சிட்டு வெளியிட்டார்.
என்னைப் போன்றத் தோழர்கள் மனம் குமுறி அதற்குச் சூடான பதிலைத் தரவேண்டும் என்று அண்ணாவிடம் கேட்டுக்கொண்டோம்.

 

அந்த நோட்டீசை வாங்கி அமைதியாகப் படித்த அண்ணா சற்றும் துடிக்காமல் பதறாமல் பொறுமையாக தனக்குள் சிரித்துக் கொண்டு நோட்டீஸ் போட்டவர் என்னைத்தானே திட்டி போட்டிருக்கிறார். பொறுமையுடன் வாங்கி படிக்க முடியுமானால் படியுங்கள். இல்லாவிட்டால் படிக்காதீர்கள். என் வாயால் அந்தத் துண்டறிக்கைக்கு பதில் சொல்லமாட்டேன். அதற்கு நான் தர்மபுரிக்கு வரவில்லை, கட்சிக் கொள்கைகளையும் தோழர்களுக்கான செயல் முறைகளையும் விளக்க வந்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி எங்களுடைய கோபத்தையும், ஆத்திரத்தையும் முரட்டுத்தனத்தையும் தணித்து கட்சிப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி பண்பாட்டையும் போதித்து அடக்கத்துடன் திரும்பிப்போகுமாறு அறிவுறுத்தி அனுப்பினார்.
த.வ.வடிவேலன் - நகர் மன்றத் தலைவர், தருமபுரி.(அண்ணா அரிய செய்திகள் மலர் - 1970)

» முதல்வர் அறிஞர் அண்ணா, பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருடன் நாமும் மேடையில் இருந்தோம். அறிஞர் அண்ணா பேசும் போது அடிகளார் அவர்களே! தாங்கள் இந்த விழவுக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது! முந்தய அரசு உங்கள் மேல் வழக்குப் போட்டது . . சிறைக்குள் தள்ள துடித்தது. இந்த அரசு உங்கள் அரசு. உங்களுக்கு தொல்லைத் தராது! வரவேற்கும், தங்களது ஆலோசனைகளை வரவேற்கும் என்று பேசினார்.
1967 பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து நாம் வேலை செய்தததை நினைவில் கொண்டிருந்தால் அவருக்கு இந்தப் பண்பு முகிழ்த்திருக்காது. அதனால்தான் திருக்குறள், நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்றது. அறிஞர் அண்ணாவின் மறப்போம் - மன்னிப்போம் என்ற புகழ் பெற்ற மொழி இங்கே நினைவுகூறத்தக்கது. எவ்வளவு பெரிய உள்ளம்! பெருந்தன்மை!

 

 

வாழ்க வசவாளர்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

நெசவு - நெசவாளர் போல்
வசவு - வசவாளர்

இரு அண்ணாவின் புதிய சொல்லாக்கம் தமிழ் மொழிக்கு புது வரவு.

1957-ம் ஆண்டு வாழ்க வசவாளர் எனும் ஓர் கட்டுரையை அண்ணா வரைந்தார்.

இரு சொல்லடுக்கு அல்ல; அண்ணாவின் நெஞ்சம்

இந்தக் கட்டுரையில் பெரியார் நம்மை எவ்வளவு தாக்கிப்பேசினாலும் தளராத பொறுமையுடன் நாம் மேற்கொண்ட பணியில் வெற்றி பெறுவோமேயானால் பெரியார் அவர்களும் போற்றிப் புகழ்வது திண்ணம்.

கரி தன் குட்டிக்கு, வீரமும், திறமும் வருவதற்காக துதிக்கையால் குட்டியை இழுத்தும், தள்ளியும் தட்டியும் கொட்டியும், பயிற்சி தரும் என்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அத்தனை பயிற்சியை தந்திருக்கிறது திராவிடக் கழகம். பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணிக்கொண்டு மறுபடியும் பயிற்சி தர முன் வரக்கூடும். அதைத் தவறாகக்கருத வேண்டாம்.
வாழ்க வசவாளர் 02.12.1957.

தோழர் ஈ.வெ.கி. சம்பத் கருத்து வேற்றுமை காரணமாக அண்ணாவைவிட்டு விலகி, பொது மேடைகளில் பேசுகிறார். அப்போது அண்ணா அவர்கள இப்படிக் குறிப்பிட்டார்.

கைமாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன், இத்தனைக் காலம். இப்பொழுதுதான் அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பெரியாரும், காங்கிரஸ் காரர்களும் என்னென்ன ஏசினார்ளோ அதை அப்படியே சிந்தாமல் எத்துவைத்துக் கொண்டு தோழர் சம்பத் பேசுகிறார். தாங்கிக் கொள்கிறேன். அதுதான் நான் காட்டவேண்டிய கைமாறு என்று கொள்கிறேன். என் இயல்போ எவர் என்னை எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும் அவர்கள் எப்போதாவது என்னைப்பற்றி எதாகிலும் இரண்டொரு நல்வார்த்தைகள் சொல்லி இருந்தால் அதை நினைவுப்படுத்திக்கொண்டு மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக்கொள்வது வாடிக்கை. இது மட்டுமல்ல அன்று நம்மை எவ்வளவோ பாராட்டினவர்கள்தானே, இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டார்கள். போகட்டும் என்று எண்ணிக்கொள்வேன்.
தம்பிக்குக் கடிதம், 23.04.1961

 

1957 தேர்தல் நேரம். அண்ணா காஞ்சியில் போட்டியிடுகிறார். காங்கிரசார் அவரை மூர்கத்தனமாக எதிர்த்தனர். ஒரு நாள் அண்ணா எழுந்து வெளியே வந்த போது அவர் வீட்டிற்கு எதிரில் உள்ள மின் விளக்குக் கம்பத்தில் காங்கிரசார் கையில் எழுதி - ஓர் தட்டியை மாட்டியிருந்ததைப் பார்த்தார். அந்தத் தட்டியில் அவர் பிறப்பு பற்றி மிக கீழ்த்தரமாக எழுதப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆத்திரமுற்ற நான் அதை அகற்றச் சென்றேன். அண்ணா அவர்கள் பொறுமையாக என்னை அழைத்து ஆத்திரப்பட வேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ ஒன்று செய்ய வேண்டும். பகலில்தான் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஓர் பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய் என்றார். நான் சொன்னதை செய் என்று வற்புறுத்தினார். அப்படியே செய்தேன்.

மறுநாள் அந்த தட்டி அங்கே இல்லை. யார் அதை வைத்தார்களோ அவர்களே வெட்கப்பட்டுக் கழற்றி எடுத்துக் கொண்டுப்போய்விட்டார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
( டாக்டர் அண்ணா பரிமளம் )

 

» பேராசிரியர் சேதுப்(பிள்ளை) அவர்கள் செந்தமிழின் சுவையினை நாட்டு மக்களக்கு விருந்தாக அளித்திடும் நல்லவர். பொன்னாடைப் போர்த்தி அப்புலவரை பெருமைப் படுத்தினர். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொன்டேனில்லை. எனினும் இருக்குமிடத்திலிருந்தே அவர் பெற்ற ஏற்றம் கண்டு இறும்பூதெய்துகிறேன். அவர் அறியார் என்று எண்ணுகிறேன். அவரிடம் தொடர்புகொண்ட குழாத்தினரில் கூட அவர் மீது பெருமதிப்புக்கொண்டோர் என் போன்றோர் இரார் . . . திரு.தேவநேயப் பாவாணர் தமிழ் மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்றொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர். அவருடைய புலமை, தெளிவும், துணிவும் மிக்கது.
- வாழ்த்துச் செய்தி, 07.10.1967

 

» தமிழ்நாட்டிலே நல்ல தமிழிலே மேடையில் பேச முடியும் என்பதை முதன் முதலில் பேசிக் காட்டியவர் திரு.வி.க.(திரு.வி.கல்யாணசுந்தரனார்) அழகிய தமிழிலே அரசியலைப் பற்றியும் எழுத முடியும் என்பதை முதலாவதாக எழுத்தில் காட்டியவர் திரு.வி.க. அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரையைத் தீட்டியவர் நம் திரு.வி.க. எதிர்கால உலகத்துக்குக்காக சிறந்த ஏடுகளைத் தாயரிப்பவர் நம் திரு.வி.க.
-அண்ணாவின் சொற்செல்வம் நூல்.

 

» அவர் வ.ரா.(வ.ராமசாமி ஐயங்கார்) 1917-ல் பிறந்தவர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் தவழ்வதற்கு தொடங்கிய நாட்கள் அவை என்று கூறலாம். அந்த நாளில் வெளிவந்த சுந்தரியில் (வ.ரா.எழுதிய நாவல்) காணப்படும் கருத்துக்கள் எப்படிப் பட்டவை என்பதைக் காணும்போதுதான் வ.ரா.வை அக்கிரகாரத்து அதிசய பிறவி என்று நாம் கூற முடிகிறது.
- திராவிட நாடு இதழ்-18.05.1947

» மக்கள் கவிஞராக மாறுவது எளிதான செயலல்ல. மிகவும் கடினமான இந்தச் சாதனையில் முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் சி.சுப்பிரமணிய பாரதி. . . .

. . . . சுற்றி வேலி கட்டிக் கொண்டு, அந்த எல்லைக்குள் அடங்கி ஒடுங்கி விடுபவை அல்ல பாரதியாரின் பாக்கள் வேதாந்த - தேசிய சிமிழ்களில் அவற்றை அடக்க முடியாது புராதன சம்பிரதாயங்களின் புராண கற்பனைகளின் ஊழல்களை அம்பலப் படுத்த அவர் அஞ்சவில்லை . . .

 

. . . . பாரதி வெறும் தேசியக் கவிஞர் அல்லர். சீர்திருத்த வானில் மின்னிய விடி வெள்ளி அவர்.
- அண்ணாவின் வானொலி பொழிவு, ஞநடியீடநள யீடிநவ. 1948.

 

» தேசியக் கவிஞர் இராமலிங்கம், தமது கவிதை ஆற்றலினால் தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டின் மூலம் கவிதை உலகிற்கும் பெருமைத் தேடித்தந்தவர்.
கவிதையாப்பதோடு விடுதப் போரிலும் பங்கு பெற்றவர் தேசியத் தொண்டும் புரிந்தவர்.
அத்தகைய சிறப்பினாலும் தமது இனிய இயல்புகளினாலும் பல்லாயிரம் மக்களின் உள்ளங்களில் இடம் பெற்றவர் நாமக்கல்லார்.
- சட்டமன்ற மேலவை உரை, 02.04.1968

 

பல்கலைக்கழகப் புலவர் தோழர். கா.சுப்பிரமணியப்(பிள்ளை) ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் துறை போகக்கற்று இரு மொழிகளிலும் எம்.ஏ. பட்டம் பெற்றவர் . . . . . . சைவமாம் கடலில் நீந்திச் செல்லும் போது, எதிரே வந்த சில சீர்திருத்தமாம் பொற்றுரும்புகளை எம்மிடத்தில் வீசி எறிந்து விட்டு, மீண்டும் அச் சைவக்கடலிலேயே நீந்திச் சென்றவரை - சைவ உலகம் கைவிட்டது என்றால், அது பெரிதும் வருந்தக் கூடிய நிகழ்ச்சியாகும்.
- திராவிடநாடு இதழ், 20.05.1946

 

வ.உ.சிதம்பரனார்.
வெள்ளையன் இந்த நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமானால் அவனுடைய ஆதிக்கதின் ஆணிவேரான வியாபாரத் துறையைத்தான் முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு சிறந்த திட்டத்தை முதலில் வகுத்த பெருமை சிதம்பரனாருக்கே உரியதாகும்.
- தமிழரசு, அரசு ஏடு-16.10.1968

 

ஓமந்தூர் இராமசாமி
ஓமந்தூர் இராமசாமி அவர்கள் கள்ளங்கபடமற்ற கிராமவாசி. அரசியல் சூதாட்டத்திற்கு அப்பாற்பட்டவர். தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும் வியாபாரியாக இருக்க மறுப்பவர். சொந்த வாழ்க்கையையும், சுகத்தையும் மிக மிகக் குறைந்த அளவினதாக்கிக்கொண்ட துறவு மனப்போக்கினர்.
- திராவிட நாடு இதழ் - 04.04. 1948.

 

காமராசர் காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர்! மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்!
முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தோண்டாற்றினால்தான் இந்தப் பாடத்தைப் பெறமுடியும்! . . . வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடகி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்! அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்!
- உரை- சிபா.ஆதித்தனார் விழா.

 

இராஜாஜி அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். திருக்குறளுக்கு அவர் உரை எழுதியிருக்கிறார். அவரது உரை தனித்தன்மை வாய்ந்தது. அந்த தனித்தன்மைக்கு காரணம் அவருடைய கூர்ந்த மதிதான்.
- பொழிவு, 14.12.1968

 

பசும்பொன் முத்து இராமலிங்கத் (தேவர்)
நான் ஒரு முறை சட்டமன்னறத்தில் அவரைப் பாராட்டிப் பேசினேன்.
உங்களைத் திட்டிப் பேசும் தேவரையே நீங்கள் பாராட்டிப் பேசலாமா? என்று கேட்டார்.
முத்து இராமலிங்கனார் புரிந்துள்ள நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் - என் மனச் சான்றுக்கு துரோகம் செய்தவன் ஆவேன் அதனால்தான் பாராட்டுகிறேன். என்று பதில் கூறினேன்.
- 30.10.1963

 

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
திரு.ம.பொ.சி. அவர்கள் அந்த காலத்திலேலே சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டவர். தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொண்டவர். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமது தியாகத்தை அரசியல் சந்தையில் விலை பேசாத உத்தமர். . . - விடுதலை நாள் விழா உரை, 15.08.1967

 

ஆர். வெங்கட் இராமன்
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் - பொளாதார அமைப்பு இவ்வளவு பெரிய மாறுதல் அடைந்ததற்கு முழு பொறுப்பு - திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களையேச் சாரும் என்பதைத் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன்.
வெங்கட்ராமன் திறமை மிக்கவர். இனிய பண்புகள் படைத்தவர்.
தமிழகத் தொழில் வளர்ச்சியின் கர்த்தாவாக அவர் இருந்தார்.
- பொழிவு, 01.08.1967.

தியாகி சங்கரலிங்கனார்
பல கோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக்கூடியது அந்த வீரர் தியாக உள்ளம்!
விருதுநகர் சங்கரலிங்கனார் அதனைப் பெற்றிருந்தார். . . . . . வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும் நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம் . . .

 

கவிஞர் கண்ணதாசன்
இந்த நேரத்தில் கண்ணதாசனின் கவிதைத் திறனைப் பாராட்ட மறந்தால் - நான் தமிழ் பொழியையே அறியாதவன் ஆகிவிடுவேன்.
(சென்னையில் 1962-ல் நடைபெற்ற கவிஞர்.கா.வேழ வேந்தன் கவிதை நூல் வெளியீட்டு விழவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை)

 

சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பியவர்களிலே முன் வரிகையில் சிறப்பிடம் பெற்றவராகப் பணியாற்றிய தோழர் ஜீவானந்தம் அவர்கள் தொடர்ந்து முற்போக்கு கருத்துக்ளை மக்களிடம் செலுத்தி அவர்தம் வாழ்க்கை செம்மையுறப் பாடுபட்டு வந்தார்.
பொதுவுடமை இயக்கத்திற்கு அவர் ஆற்றிய அரும்பணியின் காரணமாக, மக்கள் பெற்ற தெளிவும், ஆதிக்கக்காரர்கள் கொண்ட மருட்சியும் கொஞ்சம் இல்லை
. . . அவருடைய சம்மட்டி அடிகளைப் பெற்று சரிந்த சூதுக்கோட்டைகள் பலப்பல!
அவருடைய ஓயா உழைப்பினால் மக்கள் மன்றம் பெற்ற உயர் தனிக் கருத்துக்கள் பலப்பல!
- இரங்கல் செய்தி

 

1967-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ம் நான், திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் நெல்லை நகர் மன்ற கண்டிப்பேரி மருத்துவமனையில், சொல்லின் செல்வர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை பெயரால் உள்ள மகப்பேறு மருத்துவ விடுதிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட அவ்வமயம் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள். அவருடன் அப்போது மருத்துவத் துறை அமைச்சராக இருந்த எஸ்.ஜே.சாதிக் பாட்சா அவர்களும் வந்திருந்ததார்.
விழாவில் அந்த மருத்துவ மனையை உருவாக்கிய நெல்லை நகர் மன்றத் தலைவர் தியாகி ப.இராமசாமி அவர்களுக்கு அண்ணா அவர்கள் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.
தியாகி இராமசாமி அவர்கள், வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல முறை சிறை சென்றிருக்கிறார். அவர் பதவிக்காலத்தில்தான் முதன் முறையாகப் பொருட்காட்சி தொடங்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் ஆவார். அத்தகையை உயர்ந்த மனிதருக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பொன்னாடைப் போர்த்தி சிறப்பித்துப் பேசுகையில் இப்படி ஒரு தலைவருக்கு பொன்னாடைப் போர்த்துவதில் பெருமைக் கொள்கிறேன் என்றார்.
அவர் ஒரு காங்கிரஸ் காரராக இருந்தும் அண்ணா அவர்கள் இவ்வாறு வழங்கிய பாராட்டுரை அங்குள்ளோர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. அறிஞர் அண்ணாவின் உயர்ந்த உள்ளத்தை நான் அன்று கண்டேன்! மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்த - அந்த எதையும் தாங்கும் இதயத்தை நினைக்கிறேன் - நெக்குருகுகிறேன்.
- ஆர்.இரவீந்தரன், திருநெல்வேலி-26.08.76, கழகக்குரல் இதழ்

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திராவிட முன்னேற்றக் கழகத் தொடர்பை அறுத்துக் கொண்டு காங்கிரசில் சேர்ந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி அவர்களின் கட்டபொம்மன் நாடகத்திற்குத் தலைமை வகித்த அண்ணா சிவாஜி கணேசன் அவர்களின் திறமையைப் புகழ்ந்துவிட்டு கணேசன் நீ எங்கிருந்தாலும் வாழ்க எனப் பாராட்டினார்.
- சென்னையில், 15.12.1968

 

 

மனித நேயம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

 

 

மனிதாபிமானத்தின் மலைச்சிகரம்

 

அழகிரிக்கு உதவிய அன்புகிரி - அண்ணா!

புத்தர் - ஏசு - காந்தியைப் போல மனித நேயம் கொண்ட மகோன்னதமானவர் பேரறிஞர் அண்ணா!

அவரது வாழ்வே மனிதாபிமானத்தின் அடித்தளத்தில் எழுந்த மாளிகை என்றால் அது மிகையல்ல!

காரிருள் சூழ்ந்த தென்னக வானில் பேரொளியாய் பூத்தவர் தந்தை பெரியார்!

பெரியார் கண்ட பகுத்தளிவுப் பாசறை திராவிடப் பேரியக்கம்!

தெள்ளுத் தமிழ்ப் பேச்சால் மக்கள் நெஞ்சை அள்ளிக்கொள்ளும் வெல்லு தமிழ்ச் சொல்லாளன்.
சோதனை நெருப்பிலும் சுடர்ப் பொன்னாற் மிளிர்ந்த சுயமரியாதை இயக்க சொக்கத்தங்கம்!

பகை கண்டு நடுங்காத அஞ்சாசெஞ்சன் - அரிமா வீரன் - அண்ணா அவர்களாலேயே அண்ணன் என்றழைக்கப்பட்டவர் அழகிரிசாமி!

இன்றைய தலைமுறையின் இணையற்ற பேச்சாளர்கள் பலருக்கு அடியெடுத்துக் கொடுத்த இலட்சிய தீபம்!

ஒலிப்பெருக்கி இல்லாத காலத்திலேயே மணிக்கணக்கில் பேசும் மணி ஓசை உரைவித்வான்.

நாடு நகரெல்லாம் காடுமேடெல்லாம் சுற்றிச் சுழன்று சுயமரியாதை இயக்க இலட்சியங்களை தொண்டை வலிக்க - அடிவயிறு வலியெடுக்கக் கத்திக் கத்தி - எலும்புருக்கி நோய்க்கே ஆளாகிறார். வீராவேசமாக மேடையில் முழங்குவார் - கீழிறங்குவார் - இறுமுவார் - இரத்தம் கக்குவார்! கட்டுக் குலையாத இராறவமேனி சட்டை போர்த்திய கட்டையாக மாறியது! பட்டுக்கோட்டையில் எழுந்த எஃகு கோட்டை பட்டமரமானது!

தந்தை பெரியாரின் தளபதியாக இருந்தவர்தான் அண்ணா, எனினும் அழகிரிக்கு அண்ணா என்றாலே ஏனோ கசப்பு!

அண்ணன் மேல் அழகிரிக்குத்தான் அதிருப்தியே தவிர, அண்ணா அழகிரியை அண்ணன் என்றே பாசம் கொப்பளித்து அழைத்து வந்தார்!

ஒரு சமயம் - உருக்கி நோய் உக்ரதாண்டவமாட தாம்பரம் மருத்துவமனையிலே அனுமதிக்கப்ட்படு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் அழகிரி!

ஆதரவற்ற நிலை - அரவணைப்பார் யாருமிலை. குடும்பத்தைக் காப்பதெப்படி? அழகிரி நெஞ்சில் ஆற்றமாட்டாத பெருந்துயரம்!

இந்த நிலையில் அழகிரிக்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று துடிக்கிறார் அண்ணா - மறுக்கிறார் அய்யா!

துணிந்தொரு முடிவெடுத்து அழகிரிக்காக நிதி சேர்த்து ஐயாயிரம் ரூபாய் மதியழகன் மூலமாக அனுப்பி வைக்கிறார் அண்ணா!

தாம்பரம் ரயிலடியில் மதியழகன் அழகிரியை சந்தித்து அந்தப் பணத்தை ஒப்படைக்கிறார்.

எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பெருந்தொகையொன்று கிடைக்கப்பெற்ற அழகிரி - இதுவரை யாரை நான் நம்பினேனோ, அவர் என்னைக் கைவிட்டார். யாரை ஆவேசமாக எதிர்த்தேனோ, ஆத்திரம் தீருமட்டும் திட்டித் தீர்த்தேனோ, அவர் எனக்கு உதவியிருக்கிறார். மதியழகா! அண்ணாவுக்கு என் நன்றியை சொல்லப்பா என்று சொல்லி கண் கலங்கி நெஞ்சம் நெகிழ்ந்தார் அழகிரி!

அழகிரிக்கு தாம் செய்யும் உதவி இத்தோடு முடிந்துவிடவில்லை என நினைத்து அண்ணா, தம்மை கூட்டங்களுக்கு அழைக்கும் கழக நண்பர்கள் அழகிரி பெயருக்கு நூறுரூபாய் பணவிடை மூலம் அனுப்பிவிட்டு, அதற்குரிய சான்றினைக் காட்டினால் தேதிக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டங்களும் நடந்தன - அழகிரிக்கு நிதியும் குவிந்தது!

இப்படிக்கு அழகிரிக்கு அண்ணா பல்வேறு வகையிலும் உதவியது மறக்கமுடியாத வரலாற்றுச் சம்பவமாகும்!

தன்மான இயக்கத்தின் தனிப்பெருங்கவிஞர் மட்டுமல்ல; தலையான கவிமுதல்வர் புதுவை தந்த புதுமைக்குயில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

ஷெல்லி, வாட் விட்மன், கதே, புஷ்கின், உமர்கயாம் போன்ற கவிதைச் சிற்பிகளின் கூட்டுவடிவாக பாட்டுவானில் பறந்து திரிந்து தமிழியக்கம் மலர - திராவிட இயக்கம் வளர அற்புதக் கற்பனைகளை அழகோவியக் கவிதைகளாக வடித்தார்.

அண்ணா இயலிலும் நாடகத்திலும் வளர்த்த உணர்வுகளை இசைத்தமிழில் ஒங்கச் செய்த புரட்சிக்கவிஞருக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் - பொற்கிழி வழங்க வேண்டும் என்கிற பேராசை பொங்கி வழிந்தது அண்ணாவுக்கு!

அவர் தமிழைக் காக்கிறார். நாம் அவரைக் காப்போம் என எண்ணிய திண்ணிய நெஞ்சம் படைத்த அண்ணா நிதி திரட்டும் பொறுப்பேற்றார். அந்த நாளில் 25 ஆயிரம் - (இரண்டு லட்சம் பெறும்); திரட்டினார்.

சென்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையிலுள்ள தொலைபேசி அலுவலகக் கட்டிடத்திற்குப் பின்னேயுள்ள பச்சையப்பன் கல்லூரி விளையாட்டுத் திடலில் பிரம்மாண்டமான விழாவை ஏற்பாடு செய்து புரட்சிக் கவிஞருக்கு பொற்கிழி தந்தார் அண்ணா!

தனக்கென நிதி திரட்டிக் கொண்டு - தன் பெண்டு தன் பிள்ளைகளைத் தற்காத்துக் கொள்ளும் கடுகு உள்ளம் கொண்டோர்க்கு மத்தியில் அண்ணாதான் தன்னைப்பற்றிய நினைப்பை மறந்து தன்னைச் சூழ்ந்திருப்போரின் சூனிய வாழ்வில் சுடரொளியை ஏற்றி வைப்பதில் முனைந்து நின்றார்!

 

 

அண்ணாவின் தொலை நோக்குகள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

 

அவர் (பெரியார்) நன்றாக வாழட்டும். சீனக்கிழவனைப்போல் பர்மிய நாட்டு வயோதிகனைப்போல் வாழட்டும், இன்னும் காந்தியார் விரும்பியதுபோல் (125 வயது வரை) வாழட்டும். திராவிட முன்னேற்றக் கழகப் பெரும்பணியை கண்களால் காணட்டும். அவர் கொள்கைத்திட்டம் நம்மால் நிறைவேற்றப்படுவதை கண்டுகளிக்கட்டும்.
(திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழா பொழிவு - 17.09.1949)

 

இன்னும் கொஞ்ச நாட்களில் இது விளங்கிவிடும். புத்தம் புதிய தொழிற்சாலைகள் வட நாட்டவரால் திராவிடத்தில் தொடக்கப்படும்போது, வடநாட்டவரை அலட்சியம் செய்து, இங்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டாலும், விரைவிலே இவை வடநாட்டவரிடம் சிக்கிவிடப்போவது உண்மை.
(தி.மு.க.தொடக்க விழாவில் - 17.09.1949)

 

இன்று இருப்பதிலே நாங்கள்தான் மிதவாதிகள். இது தெறியும் உனக்கு? எங்களுக்கு பின்னால் இருப்பது புயல். (சாதிபேதம் சாகும் வரை - பொழிவு - 30.06.1950)

 

ஜமீனைப் பற்றி எழுதும்போது நடப்பது என்ன? ஒரு வார்த்தை வேண்டுமானால் நடப்பது தர்பார் என்று கூறிவிடலாம். இரண்டு வார்த்தைத் தேவையா? காட்டு ராஜாங்கம். ( யார் கேட்க முடியும்? - 1947)

 

பெரியார் நம்மை எவ்வளவு தான் தாக்கிப் பேசினாலும் தளராத பொறுமையுடன் நாம் மேற்கொண்ட பணியில் வெற்றிப்பெறுவோமேயானால் பெரியார் அவர்களும் போற்றிப் புகழ்வது திண்ணம்.
(வாழ்க வசவாளர் - கட்டுரை, திராவிடநாடு-கிழமை இதழ் - 02.12.1951)

 

எந்த இயக்கமும் பெற முடியாத செல்வாக்கும் சிறப்பும் பெற்று விளங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். நேரமும், சந்தர்பமும் கிடைத்தால், ஜனநாயக முறைகளுக்கு உட்பட்டு ஆளும் கட்சியை அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடிய வலிமையும் வாய்ப்பும் பெற்ற உன்னத அமைப்பாகும்.
(நம்நாடு - நாளிதழ், 17.08.1952)

 

தமிழில் அர்ச்சனை
அர்ச்சனைத் தமிழில் என்று இன்று கூறுகிறார்கள். சரி என்று ஒப்புக்கொண்டால் அத்துடன் நிற்குமா? அர்ச்சகர்கள் ஏன் தமிழர்களே இருத்தல் கூடாது என்று கேட்பர். அத்துடன் நில்லாது ஆலயத்தில் அவரவர்கென்று தொழுகை நடத்தி வரலாமே, இதற்கு அர்ச்சகர் என்றொரு தரகர் எதற்கு என்று கேட்பார்கள் - பித்தம் வேகமாக வளரும். இது அர்ச்சகரின் எண்ணம். அவர்கள் எண்ணுவது அடியோடு தவறு என்று கூறிவிட முடியாது. காற்று அப்படித்தான் அடிக்கும்.
(அர்ச்சனை - கட்டுரை, திராவிடநாடு- கிழமை இதழ், 08.05.1955)

 

தம்பி நாமென்ன கண்டோம்? இன்று நமக்கு விரோதம் செய்யும் காங்சிரஸ்காரர்களிலே எத்தனைப் பேர் எதிர்காலத்தில் நமது கிளைக்கழகச் செயலாளர்களாகப் போகிறார்களோ.
(திராவிடநாடு, கிழமை இதழ், 19.02.1956)

 

கட்டாய இந்தி கல்லறை சென்றுவிட்டது. கபட இந்திதான் காலாட்டம் நடத்துகிறது.
(திராவிடநாடு, கிழமை இதழ், 22.04.1956)

 

தமிழர்தம் இன உணர்வை அழிக்க முடியாது. (ஓட்டுச்சாவடி போகும் முன்பு, 30.12.1956 - திராவிடநாடு, கிழமை இதழ்)

 

எனக்கு மட்டும் ஆயுள் இருந்தால் இந்தத் தமிழ் நாட்டின் அரசு என் கைக்கு வராமல் போகாது. (அறிஞர் அண்ணா - காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் தெருவில் - 1957 தேர்தலின்போது பேசிய பொதுக் கூட்டத்தில்.)

 

இந்த நாராசத்தை எடுத்தெடுத்து வீசுங்கள். அப்போதுதான் சூடும், சுறுசுறுப்பும் நிரம்ப கிடைக்கும். கிடைக்கப்பெற்றால்தான் இன்றைய 15 நாளை 50 அல்லது 60 ஆகும்.
(படமும் பாடமும் - 31.03.1957, திராவிடநாடு, கிழமை இதழ்)

 

நாட்டுப் பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி . . .
எந்தப் பிரச்சினை மீது விவாதம் நடந்தாலும் அண்ணாதுரையும் அவர் சகாக்களும் தனி நாடு கோரிக்கை குறித்துத்தான் பேசுகிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா (வட நாட்டு ஆங்கில இதழ்) எழுதுகிறது. . . வடநாட்டு இதழ்கள் இது போல எழுதுவதிலே ஒரு உட்ப்பொருள் நிச்சயமாக இருக்கிறது. . . இது நாள்வரை சதுக்கங்களில் திடல்களில் எழுப்பப்பட்ட முழக்கம் இப்போது சட்டசபையில் கேட்கப் படுகிறது. ஆகவே இது உடனடியாக ஒழிக்கப்படவேண்டியவை ஆகும். அவசரமாக நடவடிக்கை எடுத்து இவர்களை ஒடுக்குங்கள் - காலம் - கடந்துவிடும் முன் காரிய மாற்றுங்கள் - என்று தில்லி அரசுக்கு கலக மூட்டுகிறார்கள் என்பது தான் இத்தனை ஏடுகளும் இது குறித்து எழுதுவதிலே உள்ள உன்பொருள் என்று நான் எண்ணுகிறேன்.
இன்றய பகைவர் நாளைய நண்பர் (28.07.1957 - திராவிட நாடு இதழ்)

1957 - 1967
இந்தப் பத்தாண்டிலே நாம் செய்கின்ற முயற்சி தோற்றுவிட்டால், பிறகு நீங்கள் கல்லின் மேலே பொறித்து வைத்துக் கொள்வதுபோல் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆப்பிரிக்க நாட்டிலே இருக்கிற நீக்ரோக்களும், அமெரிக்க நாட்டிலே இருக்கிற சிகப்பிந்தியர்களும் எந்த கதியை அடைந்தார்ளோ, அதே கதிதான் இங்கே பிறந்து வாழ்ந்து வருகின்ற பழந்தமிழ் மகனுக்குக் கிடைகுமே தவிர வேறு எந்த மாதிரி முற்போக்கும் கிடையாது. . .

1967 என்பது இப்போது நடந்து செல்லுகின்ற பாதையில் நம்மை ஒரு முக்கியமான கட்டத்திற்கு அழைத்துவர இருக்கின்றது.

 

1957 ல் நமக்கிருக்கின்ற இந்த வளர்ச்சி 1967 ல் நாமே கண்டு ஆச்சர்யப்படத்தக்க அளவிற்கு மிக அதிகமான வளர்ச்சியாகப்போகின்றது. இதிலே யாருக்கும் ஐயம் தேவையில்லை.
மதுரை மாநகரில் பொதுக்கூட்ட சொற்பொழிவு - 11.08.1957

காங்கிரசார் 1957 ல் சரியான எதிர்க் கட்சியில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து சொன்ன போது அண்ணா இப்படி விடையளித்தார்.

நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே அந்தக் குறையையும் போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.

 

அடுத்தபடியாக அமைச்சரவையிலே அமரும் வாய்ப்பும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
திரு அல்லிக்கேணி பொதுக்கூட்டம் - நம்நாடு நாளிதழ்

 

தம்பி ஒன்றை மறந்துவிடு, மற்ற இரண்டை மறவாதிரு.
உன்னையும் என்னையும் ஒழித்திட எண்ணி உலாவிடும் போகினர், உமிழ்ந்திடும் நூற்றலை மறந்துவிடு. அவரும் கூட, தாய்த்திரு நாட்டின் திருவை, திறத்தை மறந்திட இயலாதிருப்பதை மறவாதிரு. அத் திருநாடு அரசு இழந்ததால் அனைத்தும் இழந்து ஆயிரம் கல் அகன்றுக் கிடக்கும் தில்லி நோக்கி தெற்கும் கிரந்திடும் நிலைதனை கூறினேம். . . . இவர்களும் உணர்ந்தனர். உன் சொல் வென்றது என்று உண்மையை மறவாதிரு. - ஏழைச் சொல் அம்பலமேறிவிட்டது - 01.05.1960

 

. . . இத்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்யமானவர், கருணையுள்ளவர், என்று பெயர். இவரே ரோம் நகரம் எரியும் போது பிடில் வசித்த நீக்ரோவாகிவிட்டார் என்றால் வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
குற்றம் பார்க்கில் சுற்றமில்லை - திராவிட நாடு - கிழமை இதழ், 23.04.1961

 

இனி ஒரு புதிய சட்டமே செய்து நாட்டுப் பிரிவினை கேட்போரை கடுஞ்சிறையில் தள்ள யோசனை கூறக்கூடும்.
இந்தியர் ஆகின்றனர் - திராவிட நாடு கிழமை இதழ் . 28.05.1961

 

. . . காங்கிரஸ் தோற்கும்போது தெரியும் எனக்கு அப்போதே, கதர்க் கதர்னு கத்தினபோதே தெரியும்.
என்று சொல்லிவிட்டு, பெரியார் சந்தோஷம் கொண்டாடுவார் அது அவருடைய சுபாவம்.
தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன் - திராவிட நாடு கிழமை கிழமை இதழ், 03.12.61

 

என்றைக்காவது ஒரு நாள் இது (தனி நாடு பிரிவினைத் தடைச்சட்டம்) வந்து துரவேண்டிய நிலமை. எதிர் பிக்கிடப்பவன் கோழை.
சூடும் சுவையும் திராவிட நாடு கிழமை இதழ், 10.06.1962

 

இந்த மன்றத்தின் முன் (இந்திய பாரளுமன்ற நாங்கள்தான் மேலவை) இறுதி கூறுகிறேன். நாங்கள்தான் சென்னையில் இருந்து வரப்போகும் ஆளுங்கட்சி.
தில்லியில், 03.02.1963

 

கடிதம் வளருகிறது, எதிர்ப்புக்கிடையில் என்பது மட்டுமல்ல, பரவலாக ஓர் எண்ணம் நாட்டு மக்களிடம் ஒரு பேச்சு எழுந்து விட்டிருக்கிற, அடுத்த முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடும என்பதாக.
அவர் படும் அல்லல், காஞ்சி கிழமை இதழ்

தமிழகத்தில் இன்று காணப்படும் உணர்ச்சியை திளமையுடன் பயன்படுத்தி இந்தி எதிர்ப் புணர்ச்சி மீது கட்டப்பட்ட காசு காணவேண்டும தமிழகத்தில்.
அறிஞர் அண்ணாவின் படைப்புகள்

கட்டுரைகள்

1 ரோமாபுரி ராணிகள் 1942
2 புத்தர் புன்னகை 1942
3 இந்து மதமும் தமிபுரும் 1942
4 களிமண்ணும் கையுமாக 1943
5 பூதேவர் புலம்பல் 1943
6 பூதேவர் பிரதாபம் 1943
7 ஊரார் உரையாடல் 1943
8 கம்பரசம் 1943
9 ஆரிய மாயை 1943
10 வர்ணா°ரமம் ஒழிக 1943
11 விடுதலைப் போர் (திராவிடர் கழகம்) 1944
12 கட்சியில் கடவுள் மதம் 1944
13 திராவிடரும் கடவுளாரும் 1944
14 கடவுள் விளக்கம் 1944
15 நிக்கோல°தீர்ப்பு 1945
16 தேவலீலைகள் 1945
17 அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன் 1945
18 வில்லவன் கோதை விருந்து 1945
19 சிவலோகவாசிகள் 1945
20 பெரியப்புராணப் புதையல் 1945
21 வால்டேர் வீசிய வெடிகுண்டு 1945
22 மாற்றானின் மல்லிகைத் தோட்டம் 1945
23 கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது 1946
24 புராணம் போதைதரும் லேகியம் 1946
25 காமவேள் நடனசாலையில் கற்பூரக்கடை 1946
26 எரியிட்டார் என் செய்தீர் 1946
27 விதைக்காது விளையும் கழநி 1946
28 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 1946
29 பணத்தோட்டம் 1946
30 இலட்சிய வரலாறு (மரணசாசனம்) 1946
31 காண்டேர்கார் 1946
32 பயங்கரப்பாதை 1946
33 இயற்கை ஓர் அழகிய விதவை 1947
34 1858-1948 (விசித்ர வினா) 1947
35 லேபிள் வேண்டாம் 1947
36 இதுவா தமிழர் சமயம் 1947
37 அக்ரகாரத்தில் ஓர் அதிசயமனிதர் 1947
38 படமும் பாடமும் 1947
39 ஏழைப்பங்காளன் எமிலிஜோலா 1947
40 ஏழை எரிமலை 1947
41 ஆக°ட் பதினைந்து 1947
42 இப்படைத் தோற்கின் எப்படை ஜெயிக்கும் 1947
43 பாரதி பாதை 1947
44 எண்ணிப்பார் கோபியாமல் 1947
45 ரயிலேறி ராமே°வரம் போவதும் 1947
46 உலகப்பெரியார் காந்தி 1948
47 ஆதென்ஸ் நகரில் அன்றொருநாள் 1948
48 அறப்போர் 1948
49 சர்க்கார் விடுமுறை நாட்கள் 1948
50 சைவ வைணவ மத போதனை 1948
51 சீனா சிவப்பாகிறது 1948
52 படகாட்சிகளில் பரமன் 1949
53 ஆதித்தன் கனவு படமல்ல - பாடம் 1949
54 திருக்குறள் ஒரு திருப்பணி 1949
55 செக்கோ°லோவோகியா 1949
56 பெண்ணினம் பேசுகிறது 1949
57 மூடநம்பிக்கை 1949
58 வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம், விரட்டப்படுகிறோம் 1949
59 மாஜிக் கடவுள்கள் 1949
60 கடவுள் விஷயம் 1949
61 இந்தியும் தமிழ் மகனும் 1950
62 பிருந்தாவனம் முன்ஷி திட்டம் 1950
63 இருளில் ஒளி 1951
64 வாழ்க வசவாளர்கள் 1951
65 தாயகமே! தாயே! 1952
67 பொன்னொளி 1953
68 மக்கள்தீர்ப்பு மகத்தான பாடம் 1954
69 நாட்டின் நாயகர்கள் 1956
70 அரோகரா, கோவிந்தா 1956
71 படமும், பாடமும் 1957
72 ஆயிரம் கோடி 1960
73 அன்பின் பிணைப்பு நாம் கண்ட இயக்கம் 1960
74 எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960
75 அந்திக் கலம்பகம் 1960
76 பூச்சுவேலை கடன்பட்டு 1961
77 பைங்கிளிக்குப் பாலூட்டும் செந்தாமரையாள் 1961
78 பூங்காவில் புலவர் 1962
79 இருளகல 1962
80 நண்பர்கள் கேட்பதற்கு 1962
81 மழு ஏந்திய மங்கை 1963
82 காணாமல் போன கப்பல் 1963
83 குடியாட்சி கோமான் 1965
84 மொழியும் வாழ்க்கை வழியும் 1966
85 கார்டுனாயனம் 1967
86 அவன் கேட்பது வாழ்வு 1967

புதினங்கள்
என் வாழ்வு (அ) வீங்கிய உதடு 1940
கலிங்கராணி 1942
ரங்கோன் ராதா 1943
பார்வதி க்ஷ.ஹ 1944
தசாவதாரம் 1945

நாடகங்கள்
சந்திரோதயம் 1943
சிவாஜி கண்ட இந்து இராச்சியம் 1945
வேலைக்காரி 1946
ஓர் இரவு 1946
நீதிதேவன் மயக்கம் 1947
நல்லதம்பி 1949
காதல்ஜோதி 1953
சொர்க்கவாசல் 1954
பாவையின் பயணம் 1956
கண்ணாயிரத்தின் உலகம் 1966
ரொட்டித்துண்டு 1967
இன்ப ஒளி 1968

குறும் புதினங்கள்

கபோதிபுரத்துக் காதல் 1939
கோமளத்தின் கோபம் 1939
சிங்களச் சீமாட்டி 1939
குமாஸ்தாவின் பெண்தான் 1942
குமரிக்கோட்டம் 1946
பிடிசாம்பல் 1947
மக்கள் தீர்ப்பு 1950
திருமலை கண்ட திவ்யஜோதி 1952
தஞ்சை வீழ்ச்சி 1953
பவழ ப°பம் 1954
சந்திரோதயம் 1955
அரசாண்ட ஆண்டி 1955
மக்கள்கரமும் மன்னன்சிரமும் 1955
எட்டு நாட்கள் 1955
புதிய பொலிவு 1956
ஒளியூரில் ஓமகுண்டம் 1956
கடைசீக் களவு 1957
இதயம் இரும்பானால் 1960
இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் 1963
தழும்புகள் 1965
வண்டிக்காரன் மகன் 1966

இரும்பு முள்வேலி

 

1966
அப்போதே சொன்னேன் 1968




















 
  Today, there have been 1 visitors (1 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free